×

எர்ணாவூரில் ரூ.1,168 கோடியில் கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் வாங்க ஆர்வம் காட்டாத மக்கள்: 90 சதவீத வீடுகள் காலியாக உள்ளன

 

* தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் காற்று மாசு ஏற்படும் என அச்சம்

எண்ணூர்: எர்ணாவூரில் ரூ.1,168 கோடியில் கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்புளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அருகில் உள்ள தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல், காற்று மாசு ஏற்படும் என அச்சப்படுகின்றனர். எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு எதிரே, எர்ணாவூர் பகுதியில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்புறம் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ரூ.1,168 கோடியில் சுமார் 30,000 பேர் வசிக்கும் வகையில் 6,877 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டு கடந்த 2018ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டன. 400 சதுர அடியில் குடியிருப்பு, 13 அடுக்குகள் கொண்ட 33 கட்டிடங்களின் கட்டுமான பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முடிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பொது மக்களுக்கு குடியிருப்புகளை ஒதுக்கீடும் செய்யும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. அதன்படி சுமார் ரூ.17 லட்சம் மதிப்புள்ள ஒரு குடியிருப்பு ஒன்றிய அரசு ரூ.1.5 லட்சத்தை மானியமாகவும், மாநில அரசு ரூ.12 லட்சத்தையும் வழங்க, மீதமுள்ள ரூ.3.5 லட்சத்தை பயனாளிகள் ஏற்க வேண்டும் என்ற விதிமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விலை குறைவான குடியிருப்பு என்றாலும் இதுவரை சுமார் 100 பேர் மட்டுமே இந்த குடியிருப்பை பெற முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. மற்ற இடங்களில் உள்ள குடியிருப்புகளில் குடியேறுவதற்கு காட்டுகின்ற ஆர்வத்தை இந்த எர்ணாவூர் குடியிருப்புகளுக்கு காட்டப்படவில்லை. இந்த குடியிருப்பை சுற்றி தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் காற்று மாசுபாடு காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என பொதுமக்கள் தயங்குகின்றனர்.

மேலும் ஏழை எளிய மக்களுக்கு அவர்களின் பங்களிப்பாக கட்டக்கூடிய பணம் ரூ.3.5 லட்சம் செலுத்த முடியாத தொகையாகவும் உள்ளது. இதனால் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டாலும் சுமார் 90 சதவீதம் குடியிருப்புகள் காலியாகவே உள்ளன. இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ள பகுதியை சுற்றியுள்ள பழைய சுற்றுசுவர் பல இடங்களில் உடைந்து, சிதைந்து கிடக்கிறது. தரையும் ஆங்காங்கே பள்ளம், மேடுகளாக இருப்பதால் இந்த குடியிருப்பை பார்க்க வரும் பொதுமக்களுக்கு குடியேறுவதற்கான எண்ணம் தோன்றுவதில்லை. அது மட்டுமின்றி பல நாட்களாக காலியாக இருக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சமூக விரோதிகள் சிலர் மது அருந்துவதும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க பதுங்குமிடமாகவும் பயன்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

எனவே இந்த குடியிருப்பின் சுற்றுப்புறத்தை சீரமைத்து பொதுமக்கள் அச்சமின்றி குடியேறுவதற்கான சூழ்நிலை உருவாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகையில், எண்ணூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வடசென்னை அனல் மின் நிலையம், தனியார் உரம் உற்பத்தி, கனரக வாகனங்கள் உற்பத்தி, ஆயில் என பல்வேறு தொழிற்சாலைகள் இயங்குவதால் இந்த எண்ணூர் பகுதி தொழில்துறை பயன்பாடு மற்றும் அபாயகரமான மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு, காற்று மாசு போன்ற பிரச்னைகள் இருப்பதால் இங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுவது ஆபத்தானது. மேலும் வடசென்னை அனல் மின் நிலையம் மற்றும் தனியார் உருக்கு ஆலைகளின் சாம்பல்கள் உயரமாக உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் படரும்.

இதனால் குழந்தைகள், முதியோர் காசநோய், புற்றுநோய் மற்றும் நுரையீரல் பாதிப்பு போன்ற பல்வேறு வகையான நோய்களுக்கு ஆளாவார்கள் என கூறி இங்கு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டம் துவங்கப்படும் போது பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குடியிருப்புக்கு அருகே கிடப்பில் உள்ள அனல் மின் நிலையம் திட்டம் கட்டமைக்கப்படுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் குடியிருப்பில் ஒதுக்கீடு பெற பொதுமக்கள் தயங்குவார்கள். எனவே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான திட்டத்தை திருவொற்றியூர் தொகுதியில் வேறு இடத்தை தேர்வு செய்து குடியிருப்பு கட்ட வேண்டும் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் எதிர்கால பிரச்னைகளை கவனத்தில் கொள்ளாமல் பல்வேறு காரணங்களால் அதிகாரிகள் இங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக தற்போது மக்கள் வரிப்பணத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டாலும், அதில் பொதுமக்கள் குடியேற முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் மக்களுக்கு பயன்பட வேண்டிய இந்த குடியிருப்பு பயன்படாமலேயே வீணாகும் சூழ்நிலை உருவாகி இருப்பதோடு, சமூக விரோதிகளுக்கு பதுங்குமிடமாக பயன்பட்டு வருகிறது என வேதனை தெரிவித்தனர். எண்ணூர் கத்திவாக்கத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள். உள்படம். குடியிருப்பு வளாகம் புதர்மண்டி காணப்படுகிறது.

Tags : Housing Board ,Ernavur ,Ennore ,
× RELATED தவெக அரசின் அலட்சியத்தால்...