×

உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடா? விசாரிக்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 48 துறைகளுக்கு 2708 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு கடந்த டிசம்பர் 27ம் தேதி நடத்தப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு 42,064 பேர் எழுதிய இந்த தேர்வுகளில் 5 பாடங்களுக்கான முடிவுகள் மட்டும் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.

மீதமுள்ள பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. அந்த முடிவுகளில் தான் பெரும் குளறுபடிகள் நடந்திருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்வுகளில் கூட குளறுபடிகள் நிகழ்த்தப்படுவது கண்டிக்கத்தக்கதாகும். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இந்த தேர்வு மொத்தம் இரு தாள்களையும், 3 பிரிவுகளையும் உள்ளடக்கியதாகும்.

முதல் தாளில் 54, அதாவது 36 சதவீதம் மதிப்பெண் எடுத்த ஒருவருக்கு, இரண்டாம் தாளில் 49, அதாவது 98% மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள நியாயத்தையும் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 40 சதவீதம் அல்லது 35 சதவீதம் என்பது மொத்த மதிப்பெண்களை கொண்டே கணக்கிடப்படுகிறது. தாள்வாரியாக தேர்ச்சி மதிப்பெண் கணக்கிடப்பட்டால், விருப்பப்பாடத்தில் 54 மதிப்பெண் எடுத்த பொதுப்பிரிவு மாணவர் ஒருவர் அந்தத் தாளில் தேர்ச்சி பெறவே முடியாது.

அப்படிப்பட்டவர் கட்டுரைத் தாளில் 98 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்கிறார் என்பதை எவராலுமே நம்பமுடியாது. முதல் தாளில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களை போட்டியிலிருந்து நீக்க வேண்டும்; முதல் தாளில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வு பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் இவ்வாறு செய்யப்பட்டதாக தோன்றுகிறது. இது உள்நோக்கமின்றி நடந்த குளறுபடியாக தோன்றவில்லை;

மாறாக, திட்டமிட்டு செய்யப்பட்ட முறைகேடாகவே தோன்றுகிறது. எனவே, உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளின் இரண்டாம் தாளுக்கான விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி நடந்ததா அல்லது முறைகேடு நடந்ததா என்பது குறித்து விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். விசாரணை முடியும் வரை ஆள்தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Anbumani ,Chennai ,
× RELATED மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதி...