சென்னை : இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மூத்த இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் (73) காலமானார். அவரது இறப்புக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் (தமிழ்நாடு ஆளுநர்): மூத்த தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான கே.பாக்யராஜ் மறைவு, திரையுலகிற்கு பேரிழப்பாகும். தனித்துவமான கதை சொல்லும் திறன், படைப்பாற்றல் மற்றும் தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, அவரை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்துள்ளது. அவரது திரைப்பயணம் மற்றும் மரபு, பல தலைமுறை திரைப்படக் கலைஞர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
விஜய் (தமிழக முதல்வர்) : தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே.பாக்யராஜ் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பாக்யராஜ் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரைத்துறையில் கே.பாக்யராஜ் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): எம்ஜிஆர் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த பாக்யராஜ். “அண்ணா நீ என் தெய்வம்” என்ற முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார். இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தனது படைப்பாற்றலால் நகைச்சுவை உணர்வு மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவிற்கு பாக்யராஜ் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவு கூரத்தக்கவை. அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி): சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் காட்டி வளர்ந்தவர். அண்மையில் காலமான இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் முதல் படமான “16 வயதினிலே” என்ற திரைப்படத்தில், அவரது உதவியாளராக திரையுலகில் நுழைந்தவர் பாக்யராஜ். தொடர்ந்து வசன கர்த்தா, நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என்ற பன்முக ஆளுமை கொண்டவராக வளர்ந்து, தனது தனிமுத்திரையை பதித்து அழியாப் புகழ் பெற்றுள்ளார்.
அன்புமணி (பாமக): இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவால் காலமான அதிர்ச்சியிலிருந்து தமிழ்த் திரையுலகம் இன்னும் மீளாத நிலையில், அவரது மாணவரும், தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத கலைஞராக திகழ்ந்தவருமான பாக்யராஜும் மறைந்திருப்பது சோகத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. பாரதிராஜாவின் பள்ளியில் உருவான பாக்யராஜ், தமக்கென்று தனிப் பள்ளியை உருவாக்கி ஏராளமான புதிய இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகளை அறிமுகம் செய்தார்.
திரையுலகில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த பல கலைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தது அவரின் மனித நேயத்துக்கு எடுத்துக்காட்டாகும். திரையுலகில் எவரும் பேசத் துணியாத பல உண்மைகளை எவர் மனமும் புண்படாதவாறு நகைச்சுவையுடன் திரைமொழியாக பேசியவர். அரசியல் தவிர தாம் கால்பதித்த அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெற்ற பெருமையும், சிறப்பும் அவருக்கு உண்டு.
டிடிவி.தினகரன் (அமமுக): துணை இயக்குநராக திரையுலகில் அடியெடுத்துவைத்து இயக்குநராக, கதாசிரியராக நடிகராக என அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் கோலோச்சி, புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த கே.பாக்யராஜை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
