ஊட்டி: பீட்ரூட்டிற்கு விலை உயர்ந்து வருவதால் அறுவடையில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. இங்கு கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ், பட்டாணி மற்றும் வெள்ளை பூண்டு ஆகிய மலை காய்கறிகளும், சில இடங்களில் செல்லாரி, சைனீஸ் கேபேஜ், சுக்கினி உட்பட பல்வேறு சைனீஸ் வகை காய்கறிகளும் அதிகளவு பயிரிடப்படுகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் தற்போது கேரட் அதிகளவு பயிரிடப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக பீட்ரூட் உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகள் மேட்டுப்பாளையம், சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாக கொண்டுச் செல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் வரை கேரட் விலை குறைந்து காணப்பட்டது. மழை குறைந்த நிலையில், கேரட் விலை உயரத்துவங்கியது. தற்போது கிலோ ஒன்று ரூ.70 முதல் 75 வரை கிடைக்கிறது.
அதேபோல், கடந்த வாரம் வரை பீட்ரூட் விலையும் குறைந்து காணப்பட்டது. தற்போது மேட்டுப்பாளையம் மண்டியில் கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் 55 வரை விலை கிடைக்கிறது. ஒரே சமயத்தில் கேரட் மற்றும் பீட்ரூட் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பீட்ரூட்டுக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் தற்போது விவசாயிகள் அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
