×

காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பு கோரி வன அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

பந்தலூர் : பந்தலூர் அருகே காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாப்பு கோரி சேரம்பாடி வன அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக் கோட்டம், சேரம்பாடி வனச்சரகம், சப்பந்தோடு பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டு வருகிறது.

இந்த யானைகள் அந்த பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பாக்கு,ஏலம் உள்ளிட்ட விவசாயப் பயிர்களைத் தொடர்ந்து சேதப்படுத்தி நாசம் செய்து வருகின்றது. இரவு நேரங்களில் மட்டும் குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும் யானைக் கூட்டம் நேற்று பகல் நேரத்தில் ஊருக்குள் உலா வரத் தொடங்கியது.அப்போது, அந்த வழியாகச் சென்ற ஜோஷினா என்ற பள்ளி மாணவி காட்டு யானையிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதனால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், குடியிருப்புப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டக் கோரியும், கிராம மக்கள் ஒன்று திரண்டு நேற்று சேரம்பாடி வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் அய்யனார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ‘‘யானைக் கூட்டம் தற்போது அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டது, குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள காடுகளில் தற்போது 3 யானைகள் மட்டுமே உள்ளன.

அவற்றையும் அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என கூறினார்.வனச்சரகரின் விளக்கத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். எனினும், யானைகள் நடமாட்டத்தால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அச்சத்தில் முடங்கியுள்ளதாகவும், கூலி வேலைக்குச் செல்ல முடியாமலும், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப பயமாகவும் இருப்பதாகவும் அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள சப்பந்தோடு பகுதியில் தெருவிளக்குகள் அமைத்துத் தருமாறு ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், காட்டு யானைகளை நிரந்தரமாக அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினால் மட்டும்தான் தங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

Tags : Bandhalur ,Bhandalur ,Neelgiri District ,Koodalur Forest Kotham ,Serampadi Forest Farm ,Sapandou Area ,
× RELATED இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு...