இடைப்பாடி: சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகேயுள்ள கொங்கணாபுரம் கரட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி மனைவி கந்தாயி (75). இவருக்கு 3 மகள்களும், சுப்பிரமணி என்ற மகனும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி கன்னியம்மாள் ஆகிய இருவரும், கடந்த 2 ஆண்டுக்கு முன் இறந்து விட்டனர்.
இதனால், இவர்களது 16 வயது மகன், பாட்டி கந்தாயி மற்றும் உறவினர் அபிஷேக் வீட்டில் தங்கி வந்துள்ளான். இந்த சிறுவன் படிக்க பிடிக்காததால், 9ம் வகுப்புடன் பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தான். இந்நிலையில், நேற்று மாலை பாட்டியிடம் செலவுக்கு ரூ.30 பணம் வேண்டும் என சிறுவன் கேட்டுள்ளான்.
ஆனால், அவர் தரமாட்டேன் என கூறியதால், ஆத்திரம் அடைந்த சிறுவன், அங்கிருந்த கட்டையை எடுத்து கந்தாயியின் பின்மண்டையில் ஓங்கி அடித்துள்ளான். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், கழுத்து மற்றும் வயிற்றில் குத்தியுள்ளான். இதில் கந்தாயி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து, கொங்கணாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ெசன்று சிறுவன் சரணடைந்தான். அவனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
