தேனி: பெண் பணியாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராக கடந்த 24ம் தேதி பொறுப்பேற்றவர் பிரமநாயகம். இவர், இதற்கு முன் தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராக இருந்தார். அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வந்த பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
விசாரணையின்போது பிரமநாயகம், சம்பந்தப்பட்ட பெண் பணியாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது நிரூபணமானது. மேலும் அதன் அறிக்கை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் லட்சுமியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, அலுவலகத்தில் பணிபுரியும் பெண் பணியாளரிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு அச்ச உணர்வை ஏற்படுத்தியதோடு, துறையின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமாக செயல்பட்டதன் மூலம் அரசுப் பணியாளர் நடத்தை விதிகளை மீறி பிரமநாயகம் செயல்பட்டுள்ளார்.
எனவே, தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரான பிரமநாயகத்தை தமிழ்நாடு குடிமைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின்படி பொதுநலன் கருதி சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்படுவதாக தெரிவித்துள்ளார்.
* சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
நெல்லை டவுன், சேரன்மகாதேவி சாலையில் உள்ள ஸ்ரீனிவாசா நகர் பகுதியில் வசிப்பவர் லூர்து செல்லத்துரை (62), இவர் 14 வயது சிறுமியின் முன்பு ஆபாசமான செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு போக்சோ வழக்கில் அவரை டவுன் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இவரது குடும்பத்தினருக்கும், சிறுமியின் குடும்பத்தினருக்கும் இடையே குப்பை கொட்டுவது தொடர்பாக நீண்ட நாட்களாக முன்விரோதம் நிலவி வந்தது.
இந்நிலையில் இரு குடும்பத்தினரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது, முதியவர் சிறுமியிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். பாளையங்கோட்டையில் அஸ்ஸாம் மாநிலம், நோகோன் மாவட்டம், போர்பாலி பகுதியைச் சேர்ந்த ரகேஷ் பர்மன் (28) என்பவர் சாலையில் நடந்து சென்ற 13 வயது சிறுமியை விரட்டிச் சென்றதாக புகார் எழுந்தது. சிறுமி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பாளையங்கோட்டை மகளிர் போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
