×

உடல்நலம் பாதித்த ஆண் நண்பனை பார்க்க சென்ற போது 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: ஒருவர் கைது; 5 பேரிடம் விசாரணை: போரூர் அருகே பயங்கரம்

சென்னை: உடல்நலம் பாதித்த ஆண் நண்பனை பார்க்க சென்ற 17 வயது சிறுமியை, அவரது நண்பர்களே மதுபோதையில் கூட்டு பலாத்காரம் ெசய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பரங்கிமலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த இரு தினங்களுக்கு முன், வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவரை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். மாயமான அந்த சிறுமி, நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, தான் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தபோது, தனது ஆண் நண்பர்கள் 4 பேர், போதையில் தன்னை பலாத்காரம் செய்ததாக அழுதுகொண்டே பெற்றோரிடம் கூறினாள். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் பெற்றோர், தனது மகளை கூட்டு பலாத்காரம் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மவுலிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போரூர் அனைத்து மகளிர் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில், 12ம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் இருந்த சிறுமி, மீண்டும் மறுதேர்வு எழுத தயாராகி வந்துள்ளார். இந்நிலையில், தனது நண்பருக்கு உடல்நிலை சரியில்லாததை அறிந்த சிறுமி, தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, நண்பரை பார்ப்பதற்காக குன்றத்தூர் பகுதிக்கு சென்றுள்ளார்.பின்னர், அங்கிருந்து தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது அவரது நண்பர், இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து மாணவி அவருடன் பைக்கில் புறப்பட்டுள்ளார்.

வழியில், மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு மாணவியை ஆண் நண்பர் அழைத்துச் சென்றுள்ளார். இங்கு எதற்கு அழைத்து வந்தாய்?. வீட்டிற்கு போகலாம் வா, என ஆண் நண்பரிடம் மாணவி கூறியுள்ளார். அதற்கு, தனது நண்பர்கள் இங்கு வருகின்றனர். அவர்களை சந்தித்து விட்டு உடனே சென்றுவிடலாம், என ஆண் நண்பர் கூறியுள்ளார். அதன்படி, சிறிது நேரத்தில் அவரது நண்பர்கள் அங்கு வந்துள்ளனர். அங்கு மது அருந்திய அவர்கள், போதையில் மாணவியை மிரட்டி, கூட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, மாணவியை பலாத்காரம் செய்த குன்றத்தூர் அடுத்த காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது ஆசிக் (22) என்பவனை கைது செய்தனர். அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். சிறுமி வசிக்கும் பகுதி சென்னை காவல் ஆணையரக எல்லையிலும், சம்பவம் நடைபெற்ற பகுதி ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதியிலும், குற்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தாம்பரம் காவல் ஆணையரக எல்லைப் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், இந்த குற்ற சம்பவத்தில் 3 காவல் ஆணையரக எல்லையிலும் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

17 வயது சிறுமியை, அவரது நண்பர்கள் போதையில் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தொடர்ந்து சிறுமிகளுக்கு எதிரான இதுபோன்ற பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் வகையில், சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Borur ,Chennai ,
× RELATED தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு எய்ட்ஸ்...