புதுடெல்லி: இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்கான பயணத்தை விரைவுபடுத்துவதில், செயற்கை நுண்ணறிவை பொறுப்புடனும் அனைவரையும் உள்ளடக்கிய வகையிலும் ஏற்றுக்கொள்வது முக்கியப் பங்கு வகிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த செயற்கை நுண்ணறிவு புத்தாக்க உச்சிமாநாடு டெல்லியில் நேற்று நடந்தது.
மாநாட்டிற்கு பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:நாட்டின் முன்னேற்றத்திற்கு பட்டயக் கணக்காளர்கள் சமூகம் விலைமதிப்பற்ற பங்களிப்பை அளித்துள்ளனர். தொழில்நுட்ப முன்னேற்றங்களால் கணக்கியல் மற்றும் நிதித் துறைகளும் விரைவான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. பொறுப்புடன் பயன்படுத்தப்பட்டு, மனித பகுத்தறிவுடன் இணைக்கப்படும்போது, செயற்கை நுண்ணறிவு கருவிகள் செயல்திறனை மேம்படுத்தவும்,
விதிமுறைகளுக்கு இணங்குவதை வலுப்படுத்தவும், சிறந்த முடிவுகளை எடுக்க உதவவும், தொழில் வல்லுநர்கள் அதிக மதிப்பை வழங்கவும் முடியும். இந்தியா ஒரு வளர்ந்த நாடாக முன்னேறி வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவை பொறுப்புடனும் அனைவரையும் உள்ளடக்கிய வகையிலும் ஏற்றுக்கொள்வது, அந்தப் பயணத்தை விரைவுபடுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
