×

மனைவியுடன் கருத்து வேறுபாடு எதிரொலி நடிகை வீட்டில் தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

பெங்களூரு: பெங்களூருவில் நடிகை கிருஷி தபண்டாவின் வீட்டில் அவரது நண்பரான தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் வைஷாக் (45) என்பவருக்கு, அவரது மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால், பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் உள்ள ‘எலிகண்ட்’ அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கன்னட நடிகை கிருஷி தபண்டாவின் வீட்டில் கடந்த சில வாரங்களாக தங்கியிருந்தார்.

கடந்த 12ம் தேதியன்று மன உளைச்சலில் இருந்த வைஷாக், ரிசார்ட்டில் தங்கியிருந்த நடிகை கிருஷியை செல்போனில் அழைத்து, ‘நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்’ என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷி, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, வைஷாக் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இந்த தற்கொலை குறித்து ஆர்.ஆர்.நகர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழிலதிபர் ஒருவரை மிரட்டி 7 கோடி ரூபாய் பணம் கேட்ட வழக்கில் வைஷாக் மற்றும் நடிகை கிருஷி ஆகியோர் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்த வழக்கால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் குடும்ப தகராறு காரணமாக வைஷாக் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : Bengaluru ,Krishi Thapabandha ,Vaishak ,Bengaluru, Karnataka ,
× RELATED தோழி இறந்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை