×

தாமரைப்பாக்கம் அருகே வெங்கல் கிராமத்தில் மதுப்பிரியர்களின் கூடாரமான ஆரம்ப சுகாதார நிலையம்: சுற்றுச்சுவர் கட்டப்படுமா என எதிர்பார்ப்பு

 

ஊத்துக்கோட்டை: தாமரைப்பாக்கம் அருகே வெங்கல் கிராமத்தில் சுற்றுச்சுவர் இல்லாததால் மதுப்பிரியர்களின் கூடாரமாக ஆரம்ப சுகாதார நிலையம் மாறியுள்ளது. எனவே, சுகாதார நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தாமரைப்பாக்கம் அருகே வெங்கல் கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் கடந்த 2023-2024ம் ஆண்டில் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த பயன் அடைந்து வந்தனர்.

இதற்கிடையே சுகாதார நிலையம் அருகில் 3 டாஸ்மாக் மதுபானக்கடைகள் இருந்த நிலையில், கடந்த மாதம் ஒரு டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. மீதமுள்ள இரண்டு கடையில் மாலை நேரங்களில் குடிப்பிரியர்கள் மதுபானம் வாங்கி குடிப்பதற்கு இடம் இல்லாததால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள திண்ணை மீது அமர்ந்து குடித்து வருகிறார்கள். அவ்வாறு மது குடிப்பவர்கள் மது பாட்டில், உணவுக்கழிவு, பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்டவற்றை அங்கேயே வீசி செல்கிறார்கள். மறுநாள் பணிக்கு வரும் நர்ஸ் மற்றும் அங்குள்ள பணியாளர்கள் அவற்றை எடுத்து போட வேண்டிய அவல நிலை தொடர்கிறது.

இதுபோன்ற செயல்களை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காம்பவுண்டு சுவர் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், `வெங்கல் பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கி வந்து இரவு நேரத்தில் குடித்து விட்டு காலிபாட்டில்களை அங்கேயே போட்டு விடுகிறார்கள். சிலர் பாட்டில்களை உடைத்தும் போட்டு விடுகிறார்கள். இதனால் டாக்டர், நர்சுகள் மற்றும் நோயாளிகள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.

எனவே, ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி காம்பவுண்டு சுவர் கட்டி, இரும்பாலான கேட் அமைக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Vengal village ,Thamaraipakkam ,Uthukottai ,Thamaraipakkam… ,
× RELATED போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு...