×

சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் 2.47 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

 

சேலம், ஜூன் 26: சேலம் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட 2.47 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் வரும் 28ம் தேதி நடக்கிறது. நாடு முழுவதும் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் வரும் 28ம் தேதி (நாளை மறுநாள்) நடக்கிறது. ஒரே நாளில் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயினை உருவாக்கும் நோய்க்கிருமிகள் பரவலை தடுத்து, போலியோ நோயினை அறவே ஒழிப்பதே இம்முகாமின் நோக்கமாகும். சொட்டுமருந்து வழங்குவதால் குழந்தைகளின் உடலில் நோய்க்கிருமிகள் இருப்பின் அவை அனைத்தும் ஒரே சமயத்தில் வெளியேற்றப்பட்டு அழிக்கப்படுவதுடன், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாகுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் 5வயதிற்குட்பட்ட சுமார் 2 லட்சத்து 47 ஆயிரத்து 679 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 2,267 மையங்கள், நகர்ப்புறங்களில் 302 மையங்கள் என மொத்தம் 2,569 மையங்களில், காலை 7 மணி முதல் மாலை 5மணி வரை கூடுதல் தவணை போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், தனியார் மருத்துவமனைகள், சுங்கச்சாவடிகள், பேருந்து நிலையங்கள், சந்தைகள் மற்றும் பெரிய வணிக வளாகங்களில் நடைபெற உள்ளது.

மேலும், நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலியோ சொட்டுமருந்து முகாமிற்காக சுகாதாரப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் திட்ட பணியாளர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் என சுமார் 9,500 நபர்கள் ஈடுபட உள்ளனர். வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்து கொடுப்பதன் மூலம் சமுதாய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது.

எனவே, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு எத்தனை முறை போலியோ சொட்டுமருந்து அளித்திருந்தாலும், சிறப்பு முகாம் நாளில் போலியோ சொட்டு மருந்து அளித்து தங்கள் குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வருங்காலத்தில் போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Salem district ,Health Department ,Salem ,
× RELATED போக்சோ சட்டத்தில் 1000 ஆசிரியர்கள்...