* 5வது முறையாக உலக கோப்பையில் மெஸ்ஸி பர்த்டே கொண்டாட்டம்
அர்ஜென்டினா அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி நேற்று முன்தினம் தனது 39வது பிறந்த நாளை சக வீரர்களுடன் உற்சாகமாகக் கொண்டாடினார். கன்சாஸ் சிட்டி, மிஸோரி பயிற்சி முகாமில் அவர் அணியினருடன் இணைந்து குரூப் போட்டோ எடுத்து மகிழ்ந்தார். 6வது முறையாக உலக கோப்பையில் விளையாடி வரும் மெஸ்ஸி, இதில் 5 முறை உலக கோப்பை தொடரின் போதே தனது பிறந்த நாளைக் கொண்டாடி உள்ளார். கத்தாரில் 2022ல் நடந்த உலக கோப்பை தொடர் நவம்பர், டிசம்பரில் நடந்ததால் மிஸ்ஸானது.
* ரொனால்டோவுக்கு சிறப்பு பரிசு
6 வெவ்வேறு பிபா உலக கோப்பை தொடர்களில் கோல் போட்ட முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்த போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சிறப்பு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நைக் நிறுவனம் சார்பில் ரொனால்டோவுக்கு தங்க நிறத்திலான பிரத்யேக ஆர்ஜிஎன் ஷூக்கள் வழங்கப்பட்டன. கோலம்பியாவுக்கு எதிராக நாளை நடக்க உள்ள லீக் ஆட்டத்தில் அவர் இந்த ஷூக்களை அணிது விளையாட உள்ளார்.
* மெக்சிகோ ஹாட்ரிக் வெற்றி
உலக கோப்பை ஏ பிரிவில் செக் குடியரசுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மோதிய மெக்சிகோ அணி 3-0 என்ற கணக்கில் தொடர்ச்சியாக 3வது வெற்றியை பதிவு செய்தது. அந்த அணி சார்பில் சாவெஸ் (55’), ஜூலியன் (61’), பிடால்கோ (90’+4’) ஆகியோர் கோல் போட்டனர்.
ஏ பிரிவில் போட்டியை நடத்தும் மெக்சிகோ அணி 9 புள்ளிகளுன் முதலிடம் பிடித்தது. தென் ஆப்ரிக்கா (4), தென் கொரியா (3) அடுத்த இடங்களைப் பிடிக்க, செக் குடியரசு (1) வெளியேறியது.
முன்னதாக, தென் கொரியாவுடன் நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா 1—0 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது.
* சியாட்டிலில் கத்தார் அணிக்கு எதிரான பி பிரிவு லீக் போட்டியில், போஸ்னியா மற்றும் ஹெர்ஸகோவினா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.
* அட்லான்டாவில் ஹைதி அணியுடன் மோதிய மொராக்கோ (சி பிரிவு) 4-2 என்ற கோல் கணக்கில் வென்று 3 புள்ளிகள் பெற்றது. சி பிரிவில் பிரேசில், மொர்ராக்கோ அணிகள் தலா 7 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. ஸ்காட்லாந்து (3) காத்திருப்பு பட்டியலில் இருக்க, ஹைதி வெளியேற்றப்பட்டது.
