காலே: இலங்கை-ஏ அணியுடனான முதல் டெஸ்டில் (4 நாள் போட்டி), இந்தியா-ஏ அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 333 ரன் குவித்துள்ளது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா-ஏ அணி கேப்டன் துருவ் ஜுரெல் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். சாய் சுதர்சன், ஆயுஷ் பாண்டே இணைந்து இன்னிங்சை தொடங்கினர். ஆயுஷ் 25, தேவ்தத் படிக்கல் 12, ருதுராஜ் கெயிக்வாட் 22 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.
ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய சாய் சுதர்சன் சதம் விளாசி அசத்தினார். சாய் 132 ரன் ((175 பந்து, 19 பவுண்டரி) எடுத்து குணசேகரா பந்துவீச்சில் சமுதிதா வசம் பிடிபட்டார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா-ஏ அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 333 ரன் குவித்துள்ளது. கேப்டன் ஜுரெல் 68 ரன், ஷேக் ரஷீத் 53 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இலங்கை-ஏ பந்துவீச்சில் திலும் சுதீரா 2, ரவிந்து பெர்னாண்டோ, சமிகா குணசேகரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.
