மயாமி: ஸ்காட்லாந்து அணியுடன் நடந்த உலக கோப்பை சி பிரிவு லீக் ஆட்டத்தில், பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வென்றது. மயாமி அரங்கில் நடந்த இப்போட்டியில், வினிசியஸ் ஜூனியர் 7வது நிமித்திலேயே அபாரமாக கோல் அடித்து பிரேசில் அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார். முதல் பாதி ஆட்டத்தின் கடைசி விநாடிகளில் (45’+3’) அவர் மேலும் ஒரு கோல் போட்டு அசத்த, இடைவேளையின்போது பிரேசில் 2-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த பிரேசில் அணிக்கு மேத்யூஸ் குன்ஹா 60வது நிமிடத்தில் கோல் போட, ஆட்ட நேர முடிவில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வென்றதுடன் சி பிரிவில் முதலிடம் பிடித்தது. களமிறங்கினார் நெய்மர் காயம் காரணமாக முதல் 2 லீக் போட்டியிலும் விளையாடாத் நட்சத்திர வீரர் நெய்மர் ஜூனியர், ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறக்கப்பட்டார்.
மைதானத்தின் உள்ளே வந்ததும் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். போட்டி முடிந்ததும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ’நீ யாரென்பதை நினைவில் கொள்’ என அவர் பதிந்த தகவல் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.
