சென்னை: நான் மருத்துவ கல்லூரி தொடங்க விண்ணப்பித்துள்ளேன் என்பதை அமைச்சர் செங்கோட்டையன் நிரூபித்து விட்டால், அரசியலை விட்டே விலக தயாராக இருக்கிறேன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
அதே நேரம் என் மீது அவர் சொன்ன குற்றச்சாட்டு பொய் என்பது நிரூபனமானால் அவர் அமைச்சர் பதவியை விட்டு விலக தயாரா எனவும் நயினார் நாகேந்திரன் சவால் விடுத்து உள்ளார். திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், செங்கோட்டையன் எதனக்கு நீண்டகாலமாக அறிமுகமானவர்; அவர் ஆதாரமில்லாமல் இதுபோன்று பேசுவதைத் தவிர்க்க வேண்டும். செங்கோட்டையனுக்கு என்னை பற்றி நன்றாக தெரியும். அதே போல் அமைச்சர் செங்கோட்டையன் பற்றி எனக்கு மிக நன்றாக தெரியும்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே சம்பந்தம் இல்லாமல் ஆஜராகி பல இடங்களில் மற்றும் விஷயங்களில் மாட்டி கொண்டவர் தான் இந்த அமைச்சர் செங்கோட்டையன் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில், தற்போதைய முதல்வர் விஜய் சொல்லிய குட்டி கதை மற்றும் செய்த சைகை இரண்டுமே முற்றிலும் அநாகரீகமானது என்றும் கடுமையாக சாடினார்.
முன்னதாக, நயினார் நாகேந்திரன் குறித்து பேசிய தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அவர் திமுகவிடம் மருத்துவக் கல்லூரி தொடங்க விண்ணப்பித்தவர் என்றும், பாஜகவிடம் தவெக உதவி கேட்டதாகக் கூறுவது நகைப்பிற்குரியது என்றும் விமர்சித்திருந்தார்.
