- சென்னை விமான நிலையம்
- கேரளா
- சென்னை
- தாய்லாந்து
- பாங்காக்
- சென்னை சர்வதேச விமான நிலையம்
- சுங்க விமான புலனாய
சென்னை: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, தனியார் பயணிகள் விமானம் ஒன்று, நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது கேரள மாநிலத்தை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர், சுற்றுலா பயணியாக தாய்லாந்து நாட்டுக்கு சென்று விட்டு, விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்திருந்தார். அவரது உடைமைகளை சோதனை செய்த போது, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் பாக்கெட்களுக்கு இடையே, 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது.
இதன் சர்வதேச மதிப்பு ரூ.6 கோடி. இதையடுத்து, கேரள இளைஞரை சுங்க அதிகாரிகள் கைது செய்து, ரூ.6 கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் கஞ்சா போதை பொருளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், இவர் போதை கடத்தும் கும்பலுக்கு, குருவியாக செயல்பட்டு, போதைப் பொருளை கடத்தியது தெரியவந்தது. தொடர்ந்து, போதைப் பொருள் கடத்தல் கும்பல் குறித்து சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் சென்னை சர்வதேச விமான நிலைய வருகை பகுதியில், டிரான்சிட் பயணிகள் கழிவறை அருகே, விமான நிலைய ஊழியர் ஒருவர் சந்தேகப்படும் விதத்தில் சுற்றித்தி ரிந்தார். சந்தேகத்தின் பேரில் அவரை பரிசோதித்த போது, அவருடைய உள்ளாடைக்குள் 414 கிராம் தங்கப் பசை பார்சல் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.53.18 லட்சம்.
விசாரணையில், துபாயிலிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்துவிட்டு இலங்கைக்கு மற்றொரு விமானத்தில் சென்ற டிரான்சிட் பயணி ஒருவர், இந்த தங்கப் பசை இருந்த பார்சலை, கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் மறைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில், விமான நிலைய ஊழியர் தங்க பார்சலை எடுத்து, வெளியில் காத்திருந்த கடத்தல் ஆசாமியிடம் கொடுக்க இருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து இந்த தங்கத்தை கடத்திவந்த பயணியை பிடிப்பதற்கு, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
