செந்தில்பாலாஜி தம்பி முன்ஜாமீன் கோரி மனு மூன்று ஆண்டு நிலுவை வழக்கில் தற்போது தீவிரம் காட்டுவது ஏன்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கில் தற்போது தீவிரம் காட்டுவது ஏன் என செந்தில் பாலாஜியின் சகோதரர் முன்ஜாமீன் வழக்கில் ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு: கரூரில் உள்ள எங்கள் அலுவலகத்தில் கடந்த 26.5.2023ல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு வந்த திமுகவினர், வருமான வரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தவறான வார்த்தைகளால் திட்டியதாகவும், அதிகாரிகளின் லேப்டாப் மற்றும் 5 பென் டிரைவ்களை பறித்துச் சென்றதாகவும் கூறி வருமான வரித்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணகாந்த் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் என்னையும் போலீசார் சேர்த்துள்ளனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அரசியல் முன்விரோதம் காரணமாக என்னையும் வழக்கில் சேர்த்துள்ளனர்.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறேன். எனவே, வழக்கில் கைதாகாமல் இருக்க எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.தனபால் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், கடந்த 2023ல் சம்பவம் நடைபெற்றபோது மனுதாரர் அங்கு இல்லை. பிரச்னை செய்ய தூண்டியதாகவே மனுதாரர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டது. அரசு தரப்பில், பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் போலீசார் தற்போது தீவிரம் காட்டுவது ஏன்? கொலை வழக்குகளிலேயே மறுநாள் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவகாசம் கோருவது ஏன் எனக்கூறி விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தார்.

Related Stories: