×

கத்தார் தீ விபத்து: நெல்லையைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

தோகா: கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். வளைகுடா நாடான கத்தாரில் உள்ள ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரின் பர்சான் எரிவாயு ஆலையில் சமீபத்தில் ஒரு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இந்தியர் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 66 பேர் காயமடைந்துள்ளனர். உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு மற்றும் ஏற்றுமதி மையமாக கத்தாரின் ராஸ் லப்பான் தொழிற்பேட்டை நீண்டகாலமாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பார்சான் எரிவாயு விநியோக நிலையத்தில் உள்ளூர் தேவைகளுக்காக எரிவாயு சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கட்டுப்பாட்டை இறுக்கியதால் வாடிக்கையாளர்களுக்கு எரிவாயவை ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் உருவானத்தை அடுத்து கத்தார் தனது உற்பத்தியை நிறுத்தியிருந்தது. போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த நீரிணைப் பகுதியில் ஈரான் தனது பிடியை தளர்த்தியதை தொடர்ந்து கத்தார் தனது ஏற்றுமதி முனையத்தை மீ்டும் இயக்கும் பணிகளை தொடங்கியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வழக்கமான செயல்பாடுகள் தொடங்கப்பட்ட போது, எதிர்பாராத விதமாக சக்திவாய்ந்த வெடிவிபத்து நிகழ்ந்தது. இந்த தீ விபத்தில் விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருப்புப் பிழம்பு மற்றும் கரும்புகை பல மைல் தொலைவு வரை தெரிந்ததுடன், மீட்புப் பணிகளுக்காக சர்வதேச தேடுதல் குழுவினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். இதனை ஒரு தொழில்நுட்ப விபத்து என கத்தார் எனர்ஜி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், கத்தாரில் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் நெல்லையை சேர்ந்த 3 வாலிபர்கள் உயிரிழந்துள்ளனர். நெல்லை ராதாபுரத்தைச் சேர்ந்த பவித் (26), பணகுடியைச் சேர்ந்த சுஜித்குமார், கவின் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதில் பவித், சுஜித்குமாரின் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை என உறவினர்கள் கவலையோடு தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியுடன் மாயமான தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Tags : Qatar fire accident ,Nellai ,Doga ,Tirunelveli district ,Parzan gas plant ,Ras Laffan, Qatar ,Ras Lafon ,Gulf ,Qatar ,
× RELATED அரக்கோணம் பழனிப்பேட்டையில் ரூ.2...