*போலீசார் தடுத்து எச்சரிக்கை
நாமக்கல் : மோகனூர் அருகே வாடகை வீட்டை காலி செய்வதில் பிரச்னை ஏற்பட்டதில், நாமக்கல் கலெக்டர் ஆபீசுக்கு 2 மகள்களுடன் வந்து தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் தடுத்து எச்சரித்து அனுப்பினர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே என்.புதுப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் இந்திராகாந்தி. இவர் தனது மகள்களுடன் நேற்று கலெக்டர் ஆபீசுக்கு மனு கொடுப்பதற்காக வந்தார். திடீரென அவர்கள் தங்களது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அதனைக்கண்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்தவர்கள் திடுக்கிட்டனர். உடனே, அங்கிருந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
புதுப்பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் வீட்டில் கடந்த 8 ஆண்டுகளாக இந்திரா காந்தி வாடகைக்கு வசித்து வருகிறார். இந்நிலையில், செல்வம் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் வீட்டை விற்பதாக கூறி காலி செய்ய சொல்லி வற்புறுத்தியுள்ளார். செல்வம் தரப்பினர் இந்திரா காந்திக்கு ரூ.1.50 லட்சம் கொடுக்க வேண்டியுள்ளது.
இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்திராகாந்தி குடும்பத்தினர் வீட்டை காலி செய்ய மறுத்து எங்களுக்கே அந்த வீட்டை கொடுக்க வேண்டும் என கூறி வந்துள்ளனர். இதற்கு செல்வம் தரப்பினர் மறுத்து வீட்டை காலி செய்யுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர்.
இதனால், இந்திராகாந்தி மற்றும் அவரது மகள்கள் கலெக்டர் ஆபீஸ் வந்து பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
