×

ஆதித்த பகவானின் அருளும் மகிமையும்!

ஆதித்யேஸ்வரங்கள்

ஆதித்தன் என்பது சூரியனுக்கு உரிய சிறப்புப் பெயர்களில் ஒன்றாகும். அவன் காஸ்யபனின் மனைவியான அதிதியின் புதல்வன். ஆதலால் `ஆதித்யன்’ எனப்பட்டான்.
அத்தகைய ஆதித்தியன், சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்ற இடங்கள் ஆதித்யபுரங்கள் எனவும், அவனால் வழிபடப்பட்ட சிவலிங்கம் ஆதித்யேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றன. இதுவுமன்றித் தன்மைச் சூரியனின் வழித்தோன்றல்கள் என்று கூறிக்கொண்ட சோழர்கள், ஆதித்தியன் என்ற பெயரைச் சிறப்பாகச் சூட்டிக் கொண்டனர்.

மேலும், சூரியனின் பல்வேறு பெயர்களான ரவி, மார்த்தாண்டன் முதலிய பெயர்களையும் இட்டுக் கொண்டனர். ஆதித்த சோழன், ஆதித்த கரிகாலன், ஆதித்தன் கோதைப் பிராட்டி, கண்டராதித்தன், பாஸ்கரமார்த்தாண்டன் போன்று வரும் சோழர்கால மன்னர்களின் பெயர்கள் இங்கு எண்ணத்தக்கதாகும்.

இவ்வகையில், ஆதித்யன் என்று பெயர்பூண்ட சோழ மன்னர்கள் கட்டிய கோயில்களும், ஆதித்யேஸ்வரங்கள் என்றே அழைக்கப்பெற்றன. எடுத்துக்காட்டாக, திருப்புறம்பயம் எனுமிடத்தில் முதலாம் ஆதித்யசோழன் 9 ஆம் நூற்றாண்டில் கட்டிய ஆலயம் ஆதித்யேஸ்வரம் என்றழைக்கப்பட்டதை கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. சோழர்களின் திருப்பணியான திருத்தேவூர் ஆலயமும், கல்வெட்டுகளில் ஆதித்யேஸ்வரம் என்றே குறிக்கப்படுகிறது. தஞ்சை மாவட்டம் திருத்தருப்பூண்டிக்கு அருகில் உள்ள களப்பாழ் என வழங்கப்படும் களந்தை, 9-ஆம் திருமுறையுள் திருவிசைப்பா பாடல் பெற்ற திருத்தலமாகும்.

இது அந்த நாளில் களந்தை ஆதித்யேஸ்வரம் என்று வழங்கப்பெற்றது. இங்குள்ள பெருமான், இந்நாளில் அழகிய நாத சுவாமி என்றழைக்கப்படுகின்றார். இக்கோயில் பெருமானை, இக்கோயில் கல்வெட்டுகளில் ஆதித்யேஸ்வர் என்றே குறித்துள்ளனர். அம்பிகை சூரியனின் ஒளிமண்டல பிரபையை விளக்கும் வகையில், பிரபாநாயகி என்றழைக்கப்படுகின்றாள்.

இதுவும் ஆதித்தசோழனால் கட்டப்பட்டதென்பர்

இவைகளேயன்றி, ஆதித்தன் என்ற பெயர் பூண்ட மன்னர்கள், வீரமரணம் எய்தியபோது, அவர்களுக்கு அமைக்கப்பெற்ற சமாதிக் கோயில்களும் ஆதித்யேஸ்வரம் என்றே அழைக்கப் பெற்றன. எடுத்துக்காட்டாக, மாபெரும் சிவபக்தனான முதலாம் ஆதித்த சோழன், கிபி 907-ஆம் ஆண்டில், சித்தூர் ஜில்லா காளஹஸ்திக்கு அருகில் உள்ள தொண்டைமானாற்றூரில் நடைபெற்ற பெரும் படைக்கோயில் எழுப்பப்பெற்றது. அவ்வாறு அமைக்கப்பெற்ற சிவாலயமும் ‘‘ஆதித்யேஸ்வரம்’’ என்றே அழைக்கப்பெற்றதை, வரலாற்றால் அறியலாம். இவ்வாறு, பலவகைகளில் ஆதித்யேஸ் வரங்கள் எனும் சிவாலயங்கள் தென்னாட்டில் பரவலாக அமைந்துள்ளதை அறியமுடிகிறது.

ஆதித்யர் பன்னிருவர்

இரண்டு சுடர்கள், மும்மூர்த்திகள், நான்கு வேதம், ஆறு அங்கம், ஏழு மாதர்கள், எட்டு வசுக்கள், நவகிரகம், என்பது போன்று சூரியனைப் பன்னிரண்டு பேர்கள் கொண்ட தொகுதியாகப் புராணங்கள் கூறுகின்றன. இவர்கள் சிவனருளால் உதித்த ஆதித்-தீ (முதலில் தோன்றிய தீக்கோளம்) என்ற பொருள்பட ஆதித்யர்கள் எனப்பட்டனர். இவர்களைப் பன்னிரு ஆதித்தியர் அல்லது துவாதச ஆதித்தியர்கள் என அழைக்கின்றனர். இவர்களுடைய பெயரைப் புராணங்கள் பலவாறு கூறுகின்றன. இவர்கள், மாதத்திற்கு ஒருவராக வானமண்டலத்தில் பிரகாசித்து உலகிற்கு ஒளியையும் உயிர் சக்தியையும் அளிக்கின்றனர் என்று கூறுவர். இந்தியாவில், சிறப்புடன் விளங்கும் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களும், பன்னிரண்டு ஆதித்யர்களால் உண்டாக்கப்பட்ட தென்ற கருத்தும் நிலவுகிறது.

இவர்கள், சோழ நாட்டில் பன்னிரண்டு திருத்தலங்களில் வழிபட்டார்கள் என்றும், (அவை அஷ்டவீரட்டத்தலம், சப்த விடங்கத்தலம் என்பன போன்று) ‘‘சௌரக்ஷேத்திரங்கள்’’ என்று அழைக்கப்பட்டதென்று கூறுவர். இந்த நாளில், ஏராளமான தலங்களில் சூரிய வழிபாடு நடைபெற்றதாகப் புராணங்கள் கூறுவதால், ஆதியில் குறிக்கப்பெற்ற பன்னிரண்டு ஆதித்தியத்தலங்கள் எவையென்று உறுதியாகக் கூறமுடியவில்லை. பன்னிரு ஆதித்தர்களும் கூடி வழிபட்ட தலங்கள் திருக்கழுக்குன்றமும், திருச்செம்பொன் பள்ளியுமாகும். பன்னிரண்டு சூரியர்களுக்கான உருவ அமைதிகளைக் கூறும் தியானச் ஸ்லோகங்கள் உள்ளன என்றாலும், இப்போது அவற்றை அறிய முடியவில்லை.

இந்த பன்னிரண்டு சூர்யர்களும், மாதத்திற்கு ஒருவராக வலம் வருகின்றனர் என்பதைக் கண்டோம் அல்லவா? அப்படி அவர்கள் வலம் வரும் போது, அவர்களை முனிவர்கள் வாழ்த்துகின்றனர். நாகங்கள் தேரின் வடமாக இருக்கின்றன. கந்தர்வர்கள் பாடுகின்றனர். அரம்பையர்கள் தேரின் முன்பு நடனமாடுகின்றனர். அரக்கர்கள் தேரின் முன்பு நடனமாடுகின்றனர், அரக்கர்கள் காவலாக இருக்கின்றனர். இயக்கர்கள் தேர்வடத்தைப் பற்றியிழுக்கின்றனர். ஒவ்வொரு சூரியன் பவனிவரும் பொழுதும், அவனுடைய பவனியில் பங்குபெறும் கூட்டத்தில் தலைவராக, விளங்கும் முனிவர் வடக்கயிறாக விளங்கும் நாகர், கந்தர்வர், அரம்பையர், அரக்கர், இயக்கர் ஆகியோர்களின் பெயரைப் பல புராணங்கள் குறிக்கின்றன.

இந்தப் பன்னிரண்டு சூரியர்களின் பெயர்களை முறையே

1. தாத்ரு, 2. சக்கரன், 3. அரியமான், 4. மித்திரன், 5. வருணன், 6. அம்சுமான், 7. இரணியன், 8. பகவான், 9. விவச்சுவான், 10. பூஷன், 11. கவித்துரு, 12. துவஷ்டன், எனவும்.
1. அஞ்சல், 2. தாதா, 3. இந்திரன், 4. சவிதா, 5. விச்சுவான், 6. பகன், 7. பருச்சனி, 8. தோஷ்டா, 9. மித்திரன், 10. தோஷா, 11. விஷ்ணு, 12. பூஷா எனவும்.

1. விசுவான், 2. அரியமா, 3. பூஷா, 4. துவஷ்டா, 5. சவிதா, 6. பகன், 7. தாதா, 8. விதாதா, 9. வருணன், 10. மித்திரன், 11. சுக்கிரன், 12. உருக்கிரமன், எனவும் பலவாறு கூறுகின்றனர்.
இவர்களைத் தவிர வழக்கில் அதிகமாக உள்ள பன்னிரண்டு ஆதித்யர்களின் பெயர்கள் 1. வைகர்த்தன், 2. விவச்சுதன், 3. பகன், 4. மார்த்தாண்டன், 5. பாஸ்கரன், 6. ரவி, 7. லோகப்பிரகாசன், 8. லோகசாஷி, 9. திருவிக்ரமன், 10. ஆதித்தன், 11. திவாகரன், 12. அங்கிசமாலி என்பதாகும்.

சைவர்கள் பெரும்பாலும் இந்தச் சூரியர்களையே போற்றி வழிபடுகின்றனர். இவர்கள், சிவாதித்யர்கள் என அழைக்கப்படுகின்றனர். வைணவ மரபில் இப்பன்னிருவரை கேசவாதித்யர்கள் என்று குறிப்பர். மேலும் ஜைன, பௌத்த சமயங்களில்கூட ஆதித்ய வழிபாடு சிறப்புடன் இருப்பதைக் காணலாம். ஒவ்வொரு மாதத்திற்கும் உரிய சூரியன், தனது பணியைத் தொடங்கும் போதும், அவனை வாழ்த்தி வரவேற்பதாகவே தமிழ் மாதத்தின் முதல் நாளில் சூரிய வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது. இதனை மாத சங்கராந்தி அல்லது மாதப் பிரவேசம் என அழைப்பர். இந்த நாட்களில், சூரியனுக்கும் உலாத்திருமேனியாக விளங்கும் சோமாஸ்கந்தர் அல்லது சந்திரசேகர மூர்த்திக்கும் அபிஷேக அலங்காரம் செய்து வழிபடுவர்.

சூரியன் பூஜித்த ஏழுதலங்கள்

சூரியன் வழிபட்டுப் பேறு பெற்ற ஏழு திருமுறைத் தலங்களை, ஒரு பாடல் பட்டியலிட்டுக் காட்டுகிறது. இது திருவேதிக்குடி தலபுராணத்தில் இடம் பெற்றுள்ளதாகும். அந்தப் பாடல் கண்டியூர் வேதிகுடி நற்குடந்தைக் கீழ்க்கோட்டம் பண்பரிதி நன்நியமம் பாங்கார் தெளிச்சேரி பொற்புற வார்பனங்காட்டூர் நெல்லிக் காவேழும் பொற்பரிதி பூசனை செய்யூர். என்பதாகும். இதன்பொருள் கண்டியூர் (1) வேதிக்குடி (2) நல்ல குடந்தைக் கீழ்க்கோட்டம் என்னும் கும்பகோணம் நாகேசுவரசுவரர் ஆலயம் (3) பண்பமைந்த பரிதி நியமம் எனும் பருத்தியப்பர் கோயில் (4) பாங்கான திரித்தெளிச்சேரியான கோயில்பத்து (5) பொன் புறவார் பனங்காட்டூர் எனும் (பனங்காட்டூர்) (6) நெல்லிக்கா (7) ஆகிய ஏழும் பொன்போல் பிரகாசிக்கும் சூரியன் சிவபெருமானைப் பூசிக்கும் பதிகளாகும்.

வியாசர்பாடி ரவீஸ்வரர்

சூரியனின் வம்சா வளியில், திருமாலின் அவதாரமாகத் தோன்றியவர் வேதவியாசர் ஆவார். இந்த வியாசரே வேதங்களையும் பதினெண் புராணங்களையும் தொகுத்தவர். இவர் ஒருசமயம், பூவுலகம் வந்து ஒரு பர்ணகசாலை அமைத்து தவம் செய்தார். அவருடைய தவச்சாலைக்கு எழுந்தருளிய சூரியன், அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் அமைத்து வழிபாடும் செய்தான். அந்த இடமே இந்நாளில் வியாசர்பாடி என வழங்குகின்றது. அங்கு சூரியன் அமைத்த லிங்கம் ரவீஸ்வரர் என்றழைக்கப்படுகின்றார். அம்பிகை, மரகதாம்பிகை என்றழைக்கப்படுகின்றாள். வியாசர்பாடி, சென்னையின் வடமேற்குப் பகுதியில் பாரிமுனையிலிருந்து மூலகொத்தளம் செல்லும்வழியில் எருக்கஞ்சேரிக்கு முன்னால் உள்ளது. இக்கோயிலில், அழகிய ராஜகோபுரமும் விமானங்களும் உள்ளன. வேதவியாசருக்குத் தனிச்சந்நதி, மேற்குப் பிராகாரத்தில் உள்ளது.

ஆதித்தியனுக்கு அபயம் அளித்த திருநீடூர் அம்பிகை

சோழ நாட்டு தேவாரத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வது, திருநீடூர் ஆகும். மயிலாடுதுறையில் இருந்து நீடூருக்குப் பேருந்து வசதி உள்ளது. இங்கு, முதல் யுகத்தில் சூரியன் வழிபட்டான் என்பர். இங்குள்ள இறைவன், சோமநாதேஸ்வரர் என்றழைக்கப்படுகின்றார். இறைவிக்கு ஆதித்திய அபயப்பிரதாம்பிகை என்று பெயர்.

சூரியன் வழிபடும் மங்கலநாயகி

சூரியனால் வழிபாடு செய்யப்பட்டு, சிறப்பு பெற்ற திருத்தலங்களில் உள்ள அம்பிகைக்கு மங்கல நாயகி என்பதே பெயராகி விளங்குகின்றது. இத்தலங்களில் உள்ள தீர்த்தங்கள் சூரிய தீர்த்தங்கள் என்றே அழைக்கப்படுவதும் குறிக்கப்படுவதாகும். நெல்லிக்கா, பருதி நியமம், மங்கலக்குடி, குடந்தை, சிறுகுடி முதலிய தலங்கள் யாவும் சூரியன் தன்பெயரால் தீர்த்தம் அமைத்து, சிவ வழிபாடு செய்த தலங்களாகும்.

இங்குள்ள அம்பிகைகளின் பெயர்கள் யாவும் ‘‘மங்கல நாயகி’’ என்றே அமைந்திருப்பது எண்ணத்தக்கதாகும். காசியில் சூரியன் அமைத்து வழிபட்ட சிவலிங்கம், கபஸ்தீஸ்வரர் என்றும் அம்பிகை மங்கள கௌரி என்று வழங்குவதும் இங்கு எண்ணத் தக்கதாகும். எனவே சூரியன் வழிபட்ட அம்பிகைக்கு, மங்கல நாயகி என்பது சிறப்புப் பெயராக விளங்குவதை அறியலாம்.

பரிதி நியமம்

பரிதி என்றால் சூரியன். நியமம் என்றால் கோயில். சூரியன் வழிபட்டுப் பேறுபெற்ற கோயில் பரிதி நியமம் என்று அழைக்கப்படுகின்றது. இந்நாளில், இக்கோயில் பருத்தியப்பர் கோயில் என வழங்குகிறது. சுவாமிக்கு பாஸ்கரேஸ்வரர், பருதியப்பர் என்ற பெயர்கள் வழங்குகின்றன. இது தாங்க முடியாத வெப்பத்துடன் விளங்கும் சூரியன், குளிர்ச்சியுடன் திகழச் சித்திரைமாதப் பௌர்ணமி நாளில் மணலைக் கூட்டிச் சிவலிங்கம் செய்து வழிபட்ட தலம் என்பர். சூரியனால் உண்டாக்கப் பெற்ற தீர்த்தம், ஆலயத்தின் முன்னேயுள்ளது.

அம்பிகையின் பெயர் மங்கலநாயகி என்பதாகும். இக்கோயிலைத் திருநாவுக்கரசர் ‘‘பருதி நியமத்தார் பன்னிருநாள்’’ என்று தமது கோயில் பதிகத்தில் குறிப்பிடுகின்றார். இதனை பன்னிருநாள் பருதிநியமம் என்று குறித்து பன்னிரண்டு நாட்கள் இங்கு சூரியன் வழிபட்டான் என்பர்.இது, தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலையில் தஞ்சையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு காலத்தில், இது சூரியனின் கோயிலாக இருந்து பின்னாளில் சிவன்கோயிலாக மாற்றப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இங்கு, கருவறைக்கு முன்பு அமைந்துள்ள நந்தி பலிபீடத்திற்கு பின்புறம் சூரியன் மூலவரை நோக்கி வணங்கும் பாவனையில் எழுந்தருளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திருக்கழுக்குன்றமான பாஸ்கரபுரி

சிவபெருமான் அருளால் தோன்றிய பன்னிரண்டு சூரியர்கள் 1. வைகருத்தன் 2. விவசுவான் 3. மார்த்தாண்டன் 4. பாஸ்கரன் 5. இரவி 6. லோகப்பிரகாசன் 7. சாக்கி 8.சுவிக்கிரமன் 9. ஆதித்தன் 10. சூரன் 11. அஞ்சுமாலி 12. திவாகரன் என்பவர்களாவர். இவர்களைத் துவாதச ஆதித்தியர்கள் என்றழைப்பர்.ஒரு சமயம் இவர்கள் தங்களில் யார் உலகில் பணிசெய்வது என்று போட்டியிட்டுக் கொண்டனர். பிரம்மன் அவர்களை சித்திரை தொடங்கி மாதத்திற்கு ஒருவராகப் பணி செய்யும்படி ஆணையிட்டார்.

அவர்கள் அப்படிப் பணி செய்யும் காலத்தில், உதயவேளையில் மந்தேகர்

முதலிய அசுரர்கள் தடைகளை உண்டாக்கினர். அவர்கள் மீண்டும் பிரம்மனை அடைந்து தமது குறையை முறையிட்டனர். அவர் அவர்களைத் திருக்கழுக்குன்றத்திற்குச் சென்று வழிபடும்படிக் கூறினார். அதன்படியே அவர்கள் உருத்திரகோடியாகிய திருக்கழுக்குன்றத்தை அடைந்து சிவபெருமானை வழிபட்டனர். அங்கு அவர்களுடைய பக்திக்கு இரங்கிய சிவபெருமான், அவர்கள் முன்பு தோன்றி காட்சியளித்து தடைகள் நீங்கி உதிக்க அருள்பாலித்தார். எனவே திருக்கழுக்குன்றத்திற்கு பாஸ்கரபுரி, தினகரபுரி, ஆதித்தியபுரி என்பன பெயராயிற்று. இதனைக் திருக்கழுக்குன்றத்து உலா. திருக்கழுக்குன்றபுராணம் முதலியவற்றால் அறியலாம்.

சூரியன் வழிபட்ட ஆவினன்குடி

ஒரு சமயம், தேவர்கள் அனைவரும்கூடி திருக்கயிலாய மலையை அடைந்து சிவபெருமானைத் துதித்து நின்றனர். அப்போது மகதி என்ற யாழை ஏந்திய நாரதர், சூரியனை நோக்கி நீ ஒளிபரப்பாவிடில் உலக உயிர்கள் வருந்துமே என்றான். அதைக் கேட்ட சூரியன், அகங்காரம் கொண்டு அப்படித்தான் நான் ஒளி பரப்பவில்லை என்றால் உலக உயிர்கள் அழியும் என்றான். இந்த அகங்காரத்தால் தன் கதிர்களை மறைத்துக்கொண்டு உலகத்தை இருளில் மூழ்கடித்தான்.

இதை அறிந்த சிவபெருமான், தனது கண்களை விழித்தார். இவ்வாறு நீண்ட காலம் கடந்தன. சூரியன் இல்லாமலேயே சிவனின் விழி ஔியினால் இந்த உலகம் செழிப்புடன் நடைபெற்றது. இதனை உணர்ந்த அவன், சிவபெருமானைப் பன்முறை வணங்கி ஆற்றாதவனாய் மண்ணுலகம் வந்து நெல்லி மரக்காட்டில் சிவலிங்கம் அமைத்து தவம் செய்தான். அவனாலும் காமதேனுவாலும், திருமகளாலும் போற்றப்பட்டதால், அப்பதி திரு+ஆ+இனன்குடி என்றாயிற்று. அதுவே பழனிமலையின் அடிவாரத்தில் திருவாவினன்குடியாக இன்று விளங்கி வருகிறது.

மங்கலன் வழிபடும் மங்கலக்குடி

“மங்கலக் குடியீசனை,
மாகாளி வெங்கதிர்ச் செல்வனும்
விண்ணோடு மண்ணும்
சங்கு சக்ரதாரி சதுமுகன்’’

(நேர் அங்ககத்தியனும் அர்ச்சித்தாரன்றே – அப்பர்குறுந்தொகை)

தேவாரத்தில் சிவபெருமானைச் சூரியன் வழிபட்டதாக குறிப்புள்ள தலங்கள் சிலவேயாகும். அவற்றிலொன்றே திருமங்கலக்குடியாகும். இங்கு சூரியனும் எட்டு கிரகங்களும் சிவபெருமானை வழிபட்டன என்பர். அதற்கான புராணக்கதை வருமாறு. ஒரு சமயம், காலவர் எனும் முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நாள் தவத்தில் ஆழ்ந்திருந்தபோது, தமக்கும் தனது சந்ததிகளுக்கும் கிரகநிலை மாறுதல்களால் கடுந்துன்பம் நேரப்போவதை அறிந்தார். எனவே நவகிரகங்களைக் குறித்து தவம் செய்தார். நவகிரகங்கள் அவர் முன்னே தோன்றின. அவர் அவற்றை மகிழ்வித்து வணங்கித் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் துன்பம் நேராதிருக்க வரம் வேண்டுமென்று கேட்டார்.

நவகிரக நாயகர்களும் அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள்பாலித்தனர். இதையறிந்த நவகிரக தேவதைகளின் அதிபர்களும், காலதேவனும் கோபம் கொண்டனர். ஒருவனின் விதியை மாற்றும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. வரம்பு மீறி வரமளித்ததால், நீங்கள் குஷ்டநோய் பிடித்துத் துன்புறுங்கள் என்று சாபம் கொடுத்தனர். இதனால் வருந்திய நவகிரகங்கள், பூமிக்கு வந்து சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்தனர். அவர்களுக்கு சிவபெருமான் அருள் புரிந்து, நோய் நீக்கம் செய்தார். மங்கலனாகிய சூரியனால் வழிபடப்பட்டதால், இவ்வூர் மங்கலக்குடி என்றானதென்பர்.

இங்கு சூரியனால் வழிபடப்பட்ட பெருமான், பிராணவரதேஸ்வரர் என்றும், அம்பிகை மங்கலநாயகி என்றும் அழைக்கப்படுகின்றார்கள். இதன் அருகில்தான் சூரியனார் கோயில் அமைந்துள்ளது. இங்கு வழிபட்ட பின்னரே, சூரியனார் கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும் என்பது நியதியாகும்.இங்கு கார்த்திகை மாதம் ஞாயிறு தொடங்கி, மொத்தம் பன்னிரண்டு ஞாயிற்றுக் கிழமைகள் தொடர்ந்து இங்குள்ள மங்கல தீர்த்தத்தில் மூழ்கி சிவபெருமானுக்கு வெள்ளெருக்கு இலையில் தயிர் அன்னத்தை நிவேதித்து வழிபட்டால் தொல்லை தரும் வியாதிகளில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கையாகும்.

ஆட்சிலிங்கம்

Tags : Aditysvarama Aditthan ,Aditi ,Ghaziban ,Adityan ,Adityapurama ,Sivalingam ,Adityeshwar ,
× RELATED ஆனித் திருமஞ்சனமும் ஆடல்வல்லானின் அற்புத தரிசனமும்