×

பிரம்மம்!

சிலையை தெய்வமாக உங்களால் பார்க்க முடியுமா? தெய்வத்தின் பெயரை கேட்டவுடன் கண்களில் நீர் பெருகி ஓட, கற்சிலையாக சமைந்துவிட உங்களால் முடியுமா? என்னதான் நீங்கள் நொடிக்கு நொடி முருகா.. முருகா.. என்றாலும், சாலையில் கோயிலைப் பார்க்கும் போதெல்லாம் கன்னத்தில் போட்டுக் கொண்டாலும், கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் உங்களுக்கில்லை என்று உங்கள் மனதைக் கேட்டு சொல்லுங்கள் பார்க்கலாம்.

கிருஷ்ண பரமாத்மா பிறந்த இடமும், ஓடியாடி விளையாடிய இடமும், லீலைகள் புரிந்த இடமும் இந்த பாரத மண்ணில்தான் இருக்கிறது. அந்த இடங்களைக் காணும் போது, இங்குதான் கிருஷ்ணன் மண்ணைத் தின்றானா? இங்குதான் கிருஷ்ணனை உரலில் கட்டி வைத்தார்களா? இந்த வீட்டில்தான் கிருஷ்ணன் வெண்ணெய் திருடினானா? இது தானா கிருஷ்ணன் தூக்கிய கோவர்த்தன மலை எனப் பார்த்துப் பார்த்து உங்களால் புளகாங்கிதம் அடைய முடிகிறதா?

எல்லோருக்கும் பணப்பித்து இருக்கும். பெண் பித்து இருக்கும். இறைப் பித்து இருக்குமா? எந்தப் பொருளிலும் கடவுளைக் காண உங்களால் முடியுமா? அனுதினமும் அவனது நினைவில் லயித்திருக்க உங்களால் இயலுமா? என்னால் கடவுளைக் காட்ட முடியும் என்று யாரேனும் சொன்னால், எந்த தயக்கமுமின்றி உங்களால் சொன்னவரை நம்ப முடியுமா? அப்படிக் கடவுளைக் காட்ட முடியும் என்று சொன்னவர், “ராமகிருஷ்ண பரமஹம்சர்’’.

அதனை துளியும் சந்தேகப்படாமல் நம்பியவர், “நரேந்திரர்’’ என்ற பெயர் கொண்ட “விவேகானந்தர்’’. பணம், பணம் என்று நாட்டில் எல்லோரும் பேயாய் அடித்துக் கொண்டிருக்க, ஒரு சில்லரை நாணயம் தன் உடலின் மீது பட்டாலும், மின்சாரம் பாய்ந்தது போல் துடிப்பாராம் ராமகிருஷ்ணர்.

அண்ட சராசரமும் காளியின் சொரூபமாக அவருக்குத் தெரிந்தது. அன்றைய காலகட்டத்தில், ஞானத்தை வேண்டி அலைந்தவர்களுக்கு “தட்சிணேஷ்வரம்’’ புகலிடமாய் அமைந்தது. புனிதம் மிகுந்த கங்கைக் கரையில்தான் தட்சிணேஷ்வரம் அமைந்துள்ளது. கடவுள் கைவிட்டால் குரு காப்பாற்றுவார். குரு கைவிட்டால் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்பார்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். மாதாவின் மூலம் பிதாவை அறிந்து கொள்வதும். குருவின் மூலம் தெய்வத்தை அறிந்து கொள்வதும்தான் வாழ்க்கை. இவ்வுலகத்தில்தான் பணத்திற்கு மதிப்பு. அவ்வுலகத்தில் அருளுக்கே மதிப்பு என்பதைத்தான் வள்ளுவர்;

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

அதாவது, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்று கூறியுள்ளார்.சீடன் தயாராகிவிட்டால், குரு வந்துவிடுவார். உங்கள் ஆத்மாதான் மனித வடிவெடுத்து குருவாக உங்கள் கண்ணெதிரே அமர்ந்துள்ளது.

லோகமே இடைவிடாத சந்தோஷத்தை தேடியே ஓடிக் கொண்டுள்ளது. அற்ப சந்தோஷத்துக்காக அளவு கடந்த துன்பத்தைக்கூட மக்கள் பொறுத்துக் கொள்ளுகின்றனர். இந்தக் கலியுகத்தில்கூட கடவுளைத் தேடுபவர்களுக்கு பாரதம் ஒன்றே ஏற்ற இடமாய் இருக்கிறதென்றால், அதற்கு ராமகிருஷ்ணர் போன்ற குருமார்கள்தான் காரணம். அவர் அவதரித்த வங்கம்தான் நமக்கு விவேகானந்தரை தந்தது என்பதை நம்மால் மறக்க முடியுமா?

பரமஹம்சருக்கு கல்வியும், மற்ற பொழுதுபோக்கு விஷயங்களும் உவப்பைத்தந்தன. மனதை தோண்டத் தோண்ட பக்தி வெள்ளம் பீறிட்டது. அவரது ஆறுவயதில், கருப்பு மேகங்களின் பின்னணியில் நகரும் வெள்ளைக் கொக்குகளைப் பார்த்தபோது, அவருக்கு முதல் சமாதிநிலை வாய்த்தது. அவருடைய ஏழு வயதில் ஏற்பட்ட தந்தையின் மரணமும், அவரை பூமிக்கு அப்பாற்பட்டதை குறித்து யோசிக்குமாறு தூண்டின.

உலக வாழ்க்கையின் மீது வெறுப்பும், ஆன்மிக லயிப்பும் நாளுக்குநாள் அதிகரித்தது. தட்சிணேஸ்வர் காளி கோயிலின் தலைமைப் பூசாரியாக இருந்து வந்த அண்ணன் ராம்குமார் இறந்துவிட, வேறுவழியின்றி ராமகிருஷ்ணர் பூசாரியாக நியமிக்கப்பட்டார். நாளாக நாளாக காளி மீது அவருக்கு இருந்த ஈடுபாடு அதிகரித்தது.

அவர் காளி மீது கொண்ட தீவிர பக்தியினால் எல்லா உயிர்களிடத்திலும் காளியையே கண்டார். சாஸ்திரங்களை மறந்து, சடங்குகளை புறக்கணித்து, இறைப்பித்து பிடித்தவர் போலானார். பக்திக்கடல், பரமஹம்சரை வாவாவென்று அழைத்தது. அவரது நிலையைக் கண்டு கவலை கொண்ட சொந்தங்கள், சாரதாதேவியை அவருக்கு மணம் முடித்து வைத்தனர்.

இங்கு அமிர்தமே கலசத்தில் இருக்க, தேனைத் தேடி ஓடுபவன் முட்டாள் அல்லவா, சம்சாரத்தில் தடுக்கி விழுந்து விழாதபடி ஆன்மிக வைராக்கியம் இருந்தது அவருக்கு. உண்மையைத் தேடி அலைந்தவருக்கு பைரவி பிராமணி எனும் பெண்ணின் உபதேசம் கிடைத்தது. துறவி தோதாபுரி என்பவரிடம் தாந்த்ரீக நெறிகளைப் பயின்ற பின்னர், பரமஹம்சர் மிக உயர்ந்த ஆன்மிக அனுபவமான “நிர்விகல்ப சமாதியை’’ அடைந்தார்.

எல்லாம் ஒருவனே என்றால், எதற்கு இத்தனை மதங்கள், வெவ்வேறு பாதைகள், வெவ்வேறு வழிபாட்டு முறைகள் என்ற கேள்வி அடிக்கடி அவர் உள்ளத்தில் எழுந்த வண்ணமிருந்தது. கீதை காட்டும் கடவுளும், பைபிள் காட்டும் கடவுளும் ஒருவர் தானா என சோதனையில் ஈடுபட… இயேசுவை முற்றும் உணர்ந்து கிறித்தவரானார், புத்தரின் நன்மதிப்பைப் பெற்று சாதுவானார், கடைசியில் எல்லா கிணறுகளும் அடியாழத்தில் கடலுடன்தான் சங்கமிக்கின்றன என உணர்ந்து கொண்டார். கடவுள் மீது கொண்ட பேரன்பினால், தன்னையே மறந்து சிலையாகி நிற்கும் பரமஹம்சர், உலகுக்கு ஒரு செய்தி அளித்தார். அதுதான் உலக ஒருமைப்பாட்டை வலியுறுத்தியது.

அவர் அளித்த நற்செய்தி `‘பல நம்பிக்கைகள், பல பாதைகள்’’ என்பது. நீங்கள் கிறித்தவரா இருந்தால் எல்லோரிடத்திலும் இயேசுவைக் காணவேண்டும், இந்துவாக இருந்தால் ஆலயமணி ஓசையைக் கேட்டவுன் பரவசமடைந்து சிலநொடிகள் சிலையாகி விடவேண்டும். இவை தான் பக்தியின் சூத்திரங்கள் என்றுரைத்தார். உள்ளத்தில் எள்ளளவும் விகற்பமில்லாத குழந்தைத்தனத்துடன் வாழ்ந்த பரமஹம்சர், தனது மனைவியான சாரதாவை தெய்வீகத் தாயாகவே கருதி வணங்கினார்.

அவர்களின் திருமண உறவு முற்றிலும் புனிதமானது. சாரதாதேவி, கணவரின் விருப்பப்படியே ஆன்மிகப் பாதையில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டார். அக்காலகட்டத்தில், ‘பிரம்ம சமாஜம்’ போன்ற பிற அமைப்புகளில் உறுப்பினராக இருந்தவர்கள்கூட பரமஹம்சரிடம் வரத் தொடங்கினர். பரமஹம்சரின் காலடி பட்டதால், தட்சிணேஷ்வரம் ஆன்மிக புனிதபூமியாக மாறியது.

பரமஹம்சரின் வாழ்க்கை சரிதம் இப்படியும் ஒரு மனிதர் மண்ணில் வாழமுடியுமா என்று படிப் பவர்களை வியப்பில் ஆழ்த்தும். பரமஹம்சர் வேத பண்டிதர் அல்ல, நடைமுறை வாழ்க்கையில் கடவுளின் இருப்பு எங்கே உள்ளது என பாமரர்களுக்கும் புரியும்படி போதித்தார்.

கடவுள் அவதாரமாக இறங்கி வருவதுபோல, மனிதன் கடவுள் நிலைக்கு ஏற முடியும் என உலகுக்கு உணர்த்துகிறது பரமஹம்சரின் வாழ்க்கை. படகு இருந்தும் துடுப்பு இருக்கவில்லை என்றால் நதியைக் கடக்க முடியுமா? எனவே குருவே துடுப்பு, பெளதிக உடல் வெற்றுப் படகுதான். பசி, தூக்கம் மறந்து கடவுளைத் தேடுகிறாயா… நான், கடவுளை உனக்குக் காட்டுகிறேன் என்றார் நரேந்திரரிடம் பரமஹம்சர். நதிகள் அனைத்தும் கடலில் சங்கமிப்பதைப் போல, தட்சிணேஸ்வரத்தில் சங்கமித்தன. நகரத்துக்கு பல வழிகள் இருப்பதைப் போல, ஒரு கடவுளுக்கு பல நாமங்கள் இருக்கின்றன. பாதை உண்மையாகிவிடாது. அதையே பிடித்துக் கொண்டு புலம்புவதில், பயனொன்றும் இல்லை.

நம் முன்னால் இருக்கும் இலக்குதான் கடவுள்.

அதைத்தான் விதி, கடவுள், பிதா, என்று வெவ்வேறு பெயர்களால் அழைக்கிறோம். உண்மையான பக்தனைப் பற்றி பரமஹம்சர் கூறும்போது, யாரெல்லாம் காமம், பேராசை, புகழைத் துறப்பவனோ அவன் கடவுளுக்கு மிக நெருக்கமானவன் என்கிறார். கடவுளுக்கு கட்டளையிட முடியாது, வேண்டுகோள் வைக்கலாம். பிறகு காப்பதும், கைவிடுவதும் அவனின் விருப்பம். அதைப்போல, எல்லோரும் புத்தனாகிவிட்டால் பூமியே சொர்க்கமாகிவிடுமே.. நரகமென்ற ஒன்று தேவைப்படாதே.. எமனுக்கு வேலையே இருக்காதேடா என்று பரமஹம்சர் தனது சீடர்களிடம் சிரித்துக் கொண்டே கூறுவது வழக்கம்.

உங்கள் கடிதத்தை கடவுள் நிச்சயமாக படிப்பார். என உங்களிடம் உத்தரவாதம் தரப்பட்டால், எத்தனையோ இரவுகள் தூக்கத்தைத் தொலைத்து கடிதம் எழுத முயற்சித்தாலும், அக்கடிதத்தை நிறைவு செய்ய முடியாது. உங்கள் வாழ்க்கையை கூர்ந்து கவனித்தீர்களேயானால், கடவுள் உங்கள் பிரார்த் தனையை செவிமடுக்கிறார் எனத் தெரியவரும். பரமஹம்சர் தனது போதனையில் கவலைப்பட ஏதுமில்லை. கர்த்தா நாமல்ல என்பதை நன்கு உணர்ந்தும் உன்னைச் சரணடையச் செய்யாமல் தடுப்பது ‘நான்’ எனும் அகங்காரம்தான் என்கிறார். பரமஹம்சரின் வாழ்க்கையும், உபதேசங்களும் கடவுளின் விருப்பத்துக்கு நம்மை ஒப்புக்கொடுத்துவிட்டால், நாளையைப் பற்றிய பயம் நம்மிடம் இருக்காது என்பதையே உணர்த்துகிறது.

அப்பன் எத்தனை அப்பனோ? அம்மை எத்தனை அம்மையோ, இன்னும் எத்தனை ஜென்மமோ எனப் புலம்பிய பட்டினத்தார், கடவுளைக் காண ராஜ வாழ்க்கையைத் துறந்து கெளபீனத்துடன் அலையவேண்டி இருந்தது. கடவுளை மறுப்பவர்கள் பக்கம் நீ நிற்கலாம், நதியில் இறங்கியதும் உன் காலை முதலை கவ்விக் கொண்டால், நீ அடுத்த நொடியே கடவுளைத்தான் துணைக்கு அழைப்பாய். எல்லாவற்றுக்கும் அவன் பொறுப்பு என அவன் திருவடியில் சரணடைந்துவிட்டால், நமக்கு ஏற்படும் அவமானம், வெறுப்பு, பயம் நம்மை ஒன்றும் செய்யாது. இந்த உலகம் நம்பிக்கையை மையமாக வைத்துதான் இயங்குகிறது. புற அழுக்கை நீக்க நீராடலாம். அக அழுக்கை நீக்க ஆன்மிக எண்ணம் தோன்ற வேண்டும்.

குடும்பத்தைக் காப்பாற்ற பணம் வேண்டும். அதை சம்பாதிக்கவே நீங்கள் அலுவலகம் செல்கின்றீர்கள். அறுபது வயது பூர்த்தியாகிவிட்டால், உங்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் இல்லையா? முன்பிருந்த மதிப்பும் இருக்காதுதானே! இதையேதான் பரமஹம்சர், பணம் காசு என்ன செய்யும் உன்னை, அதுதான் போகும்போது எல்லாவற்றையும் பறிமுதல் செய்துதானே அனுப்புகிறார்கள் என்பார்.

உலகில் உன் செல்வத்தைப் பொறுத்தே மனைவியும், சுற்றமும் அமைகிறது. உன்னிடம் ஒன்றுமில்லை என்றால் அமைதியாக அனுப்பி வைப்பார்கள். உன்னிடம் சொத்து சுகம் இருந்தால், பிணத்தை நடுரோட்டில் விட்டுவிட்டு பஞ்சாயத்து பண்ணுகிறேன் என்ற பேர்வழியில் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்று சீடர்களிடம் பரமஹம்சர் வேடிக்கையாக சொல்வது வழக்கம்.
ஆலயத்தில் மட்டுமல்ல, உன் மனமே கோயிலாக இருந்தால், உன் உள்ளத்திலும் இறைவன் எழுந்தருளுவான். பக்தி என்பது பல பாவங்களைக் கொண்டது. தாய், தனது குழந்தைகளுக்கு ஏற்றபடி அவரவர் விரும்பும் வண்ணம் சட்னியாக, குழம்பாக, காய் – கனிகளாக சமைப்பதில்லையா?

அதுபோலத்தான் தெய்வத்தை தாயாக, குழந்தையாக, காதலனாக, நண்பனாக என பலபாவங்களில் அவனைத் தொழுகிறோம். பரமஹம்சர் கூற்றுப்படி ‘நான் யார்’ என அறிந்துகொள்ள ‘இதுவல்ல’ ‘இதுவல்ல’ என மறுத்துக் கொண்டே வரவேண்டும். நான் உடலல்ல, மனமல்ல, புத்தியல்ல கடைசியில் எது எஞ்சி நிற்கிறதோ அதுதான் நீ. பிரம்மமே பல வடிவாக ஆகிநிற்கிறது. எதன் பொருட்டு என்று நீயே ஆராய்ந்து பார் என்பார். பிரம்மத்தை அறிவதல்ல பக்தி, பிரம்மமாகவே ஆகிவிடுவதுதான் பக்தி. உலகியல் என்பதே சேறுதான். மனத்தை கடவுளிடம் இருத்தினால், நீ புரண்டாலும் உன்மீது சேறு ஒட்டாது. ஆசைவயப்பட்டு மாயையில் மூழ்கிவிட்டால், மறுஜென்மத்தில் விலங்கு கதியை அடைய
வேண்டியிருக்கும்.

அறிந்தவர்களால் ஞானத்தை விளக்க முடியாது. எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை அதனை விவரிக்க. தேன் இனிக்கும் என்பது கேள்வி ஞானம், தேனை ருசிப்பது என்பது அனுபவம், அப்படி அனுபவித்து உணர்ந்தவர்களில் ஒருவர்தான் பரமஹம்சர். வாழ்க்கைப்படகில் எந்த இடத்தில் துளை இருக்கிறதென்று அவருக்குத் தெரியும். ஓர் அணுவில்தான் அண்டமே அடங்கியுள்ளது. அணுவைப் புரிந்துகொண்டால், அண்டத்தைப் புரிந்துகொள்ளலாம்.

சேறும் சகதியுமாய் இருந்தாலும், ஆழம் எவ்வளவு அடி இருந்தாலும், நீர்மட்டத்துக்கு மேலே வந்து கதிரவனை எட்டிப் பார்ப்பது நீர்ப்பூ மட்டுமே… சம்சாரக் கடலில் மூழ்கிவிடாமல் மேலே வந்து கடவுளை அனுபவித்தவர்தான் பரமஹம்சர். அவர் அன்புக்காகவே கடவுளை அன்பு செய்தார். பரமஹம்சரின் அருட்காற்று வீசிக்கொண்டுதான் உள்ளது. நீங்கள் பாய்மரத்தை விரித்தால் போதும். தோற்றத்தில் சாதுவாகத் தெரியும் அவருளிருந்துதான் ராமரும் கிருஷ்ணரும் வெளிப்பட்டார்கள். உலக வாழ்வு அநித்யமானது. இங்கிருந்து கொண்டுதான் நித்யத்தைப் பற்றி அறிய முயற்சி எடுக்கிறோம்.

அலைகளுக்குப் பயந்து கரையிலேயே நிற்கும் நம்மை கைப்பிடித்து ஞானக்கடலுக்குள் அழைத்துச் செல்ல குரு வேண்டும். தீக்குச்சியை பற்ற வைக்கும் போது அறையிலுள்ள இருட்டு இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடுகிறதல்லவா. உனக்குள் பிரகாசம் பரவும் போது, உனது கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்துவிடும். குருவருள்தான் இறுதி உண்மையை அறிந்து கொள்வதில் தீவிரம் காட்டிய சாதாரண நரேந்திரரை விவேகானந்தராக மாற்றியது.

அவர் தூலவடிவாக இருந்தாக வேண்டிய அவசியமில்லை. இறுதி இலக்கை அடைவதில் உனது முயற்சி கால்பங்கு, குருவருள் முக்கால் பங்கு. மண்ணுலகின் மகாபுருஷரான ராமகிருஷ்ணரால்தான் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் ஆன்மிகத்தை உலகெங்கும் பரப்பும் மையமாய் தட்சிணேஸ்வரம் இன்றளவும் திகழ்ந்து வருகிறது.

மதியழகன்

 

Tags : Brahma ,Muruga ,
× RELATED ஒற்றியூர் சிவசக்தியின் பெருமைகள்