×

வலங்கைமான் பேரூராட்சியில் ரூ.1.65 கோடி நவீன எரிவாயு தகன மேடை

*சோதனைக்கு பிறகு பயன்பாட்டிற்கு வந்தது

வலங்கைமான் : வலங்கைமான் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.1.65 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை சோதனை முயற்சிகளுக்கு பிறகு பயன்பாட்டிற்கு வந்தது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் இறப்பின் சதவீதமும் அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு சராசரியாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.

இதனால், இங்கு நவீன எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் எனஅரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் விருப்பாச்சிபுரம் தில்லையம்பூர் சாலையில் குடமுருட்டி ஆறு அருகே தென்கரையில் பேரூராட்சி சார்பில் முன்னதாக மயான கொட்டகை, ஈமக்கிரியை மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டு இருந்தது.

அந்த இடத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் 23 -24ம் நிதியாண்டில் நவீன எரிவாயு தகன மேடை ரூ.1.65 கோடி மதிப்பில் கட்டுமான பணி துவங்கப்பட்டு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. எரிவாயு தகன மேடையில் வலங்கைமான் பேரூராட்சி 15 வார்டுகளில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளது.

வலங்கைமான் பேரூராட்சியில் ஜாதிக்கு ஒரு சுடுகாடு, இடுகாடு என தனித்தனியாக உள்ளநிலையில், பல்வேறு பிரச்னைகளும் இருந்து வருகிறது. இந்நிலையில், அனைவரும் சமத்துவமாக பயன்படுத்தக்கூடிய நவீன எரிவாயு தகன மேடை கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் மூலமாக கட்டப்பட்டது.

பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில் கட்டுமான பணிகள் முடிவு பெற்ற நிலையில் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை அடுத்து நவீன எரிவாயு தகன மேடை பயன்பாட்டுக்கு வந்தது.

Tags : Valangaiman Town Panchayat ,Valangaiman ,Town Panchayat ,Thiruvarur district ,
× RELATED முதல்வர் விஜய்க்கு இந்திய ஹஜ்...