திருப்பூர்: திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பழுதடைந்த குடிநீர் இயந்திரம் சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கோவை, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தினந்தோறும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமன்றி, மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் நகர பேருந்துகளும் அதிக அளவில் இங்கிருந்துதான் இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பின்னலாடை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு செல்வோர் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பயணிகள் இந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த பேருந்து நிலையத்தில் கோவை, ஈரோடு, சேலம் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும் பகுதியில் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் கடந்த சில நாட்களாக பழுதடைந்து முற்றிலும் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இந்த குடிநீர் இயந்திரம் இரும்பு கூண்டுக்குள் பூட்டப்பட்டு, முறையான பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. இதனால், பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவையான குடிநீரை பெற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வேறு வழியின்றி வெளியில் உள்ள கடைகளில் அதிக பணம் கொடுத்து குடிநீர் பாட்டில்களை வாங்கும் நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்களின் அவதியை போக்கும் வகையில், பழுதடைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை உடனடியாக சீரமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
