கோவில்பட்டி: கோவில்பட்டியில் போலி ரசீது அச்சடித்து சாலையோர வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்யும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் மவுனம் காப்பதாக புகார் எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சாலையோரங்களை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடை வைத்துள்ளனர். அதேபோன்று மக்கள் செல்லும் நடைபாதைகளையும் ஆக்கிரமிப்பு கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அவ்வாறு வியாபாரம் செய்பவர்களுக்கு தரை வாடகை என்ற பெயரில் நகராட்சி நிர்வாகம் ஏலம் விட்டு, நாள்தோறும் ஒவ்வொரு கடைக்கும் ரூ.20 வீதம் வசூல் செய்ய குத்தகை விட்டு வந்தனர்.
இதனிடையே தரை வாடகை என்ற பெயரில் உள்ளாட்சி அமைப்புகள் வசூல் செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து தரை வாடகை வசூல் நிறுத்தப்பட்டது. நகராட்சி பகுதியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக தரை வாடகை வசூல் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக திடீரென சாலையோர கடைகளில் ரூ. 20 தரை வாடகை வசூல் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு வசூல் செய்யப்படும் போது வியாபாரிகளுக்கு அதற்கான ரசீது வழங்கப்படுகிறது அந்த ரசீதில் நாட்கள் வேறு வேறாக இருந்தாலும் வரிசை எண் ஒன்றாக இருக்கிறது. நகராட்சி ஆணையர் என்ற இடத்தில் சீல் இருக்கிறது. குத்தகைதாரர் பெயர் மட்டும் ரசீதில் இருக்கிறது.
ஆனால் நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் தாங்கள் தரை வாடகை வசூல் எதுவும் செய்ய சொல்லவில்லை. இதற்கு முன்பு ஏலம் எடுத்தவர் நகராட்சி பெயரைச் சொல்லி வசூல் செய்திருப்பதாகவும் அவரை கூப்பிட்டு நாங்கள் கண்டித்து அனுப்பி விட்டோம். இனிமேல் வசூல் செய்ய மாட்டார் என்றும் கூறுகின்றனர். இதேபோன்று கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்திலும் தரை வாடகை என்ற பெயரில் நகராட்சி ஆணையாளர் மற்றும் குத்தகைதாரர் கையொப்பம் இல்லாமல் அண்ணா பஸ் நிலையத்தில் கரும்புச்சாறு கடை வைத்திருக்கும் ஒருவர், தினமும் ஒவ்வொரு கடையைப் பொருத்து ரூ.50 முதல் 150 ரூபாய் வரை வசூலித்து வருகிறார்.
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்திற்குள் உள்ள கடைகளுக்கு பொருட்களை இறக்க எந்த வாகனம் வந்தாலும் அந்த வாகனத்திடமும் ரூ.50 வீதம் வசூலித்து வருகிறார். மேலும் பஸ் நிலையம் வெளியே இருந்து திலகராஜ் வரை உள்ள சாலையோர கடைகளிலும் இந்த வசூல் வேட்டை தொடர்கிறது. தினமும் ரூ.6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து நகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது நாங்கள் தரை வாடகை வசூலிக்க யாருக்கும் ஏலம் விடவில்லை என்று தெரிவித்தனர்.
கோவில்பட்டி நகராட்சி பெயரில் போலி ரசீது அடித்து வசூல் செய்பவர்கள் மீது காவல் துறையில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்த்து வருவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். கோவில்பட்டி நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் பெருகுவதற்கு இந்தப் போலி ரசித்து கும்பல் தான் காரணம் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
