×

தீண்டாமை வன்கொடுமை புகார் மீது உடனே வழக்குப்பதிய வேண்டும்: போலீசாருக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: தீண்டாமை வன்கொடுமை புகார்களின் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்வது போலீசாரின் கட்டாய கடமை என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த அருண்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் எருக்கலைநத்தம் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில் நிர்வாக அறங்காவலராக இருந்து வருகிறேன். இந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்களை சிலர் போலி பத்திரம் மூலம் அபகரித்துள்ளனர். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தபோது என்னை சாதி பெயரை குறிப்பிட்டு இழிவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, பின்னர் டிஎஸ்பியிடம் கொடுத்த மனுவின் அடிப்படையில் அப்பன் திருப்பதி போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யாமல் புகாரை முடித்து வைத்தனர்.

ஊமச்சிக்குளம் டிஎஸ்பியும் இந்த விவகாரம் சிவில் தகராறு எனக் கூறி புகாரை முடித்து வைத்தார். எஸ்சி – எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றச்சாட்டுகளில் வழக்குப்பதிவு செய்யாமல் விசாரணை நடத்துவது சட்டவிரோதம். வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி டிஎஸ்பி பதவிக்குக் குறையாத அதிகாரியே விசாரணை மேற்கொள்ள வேண்டும். எனவே என் மனுவின் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, ‘‘எஸ்சி – எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி, வரும் புகார்களில் வழக்குப்பதிவு செய்வதற்கு முன் எந்தவிதமான முன் விசாரணையும் நடத்தக் கூடாது. புகாரின் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்வது போலீசாரின் கட்டாய கடமை. இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்த அதிகாரம் இல்லை. அவரால் நடத்தப்பட்ட விசாரணை செல்லாது என்ற நிலையில், புகாரை முடித்து வைத்தது சட்டவிரோதம். மனுதாரரின் புகாரில் எஸ்சி – எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் பிற குற்றச்சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டிய அம்சங்கள் இருந்தால், எந்தவித முன் விசாரணையுமின்றி உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இது குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.

Tags : Madurai ,High Court ,Arunkumar ,Ayyanar ,Erukkalainatham ,
× RELATED செயற்கை நுண்ணறிவு கருவி எதுவாக...