×

பலாத்காரத்தில் கொல்லப்பட்ட மாணவி குடும்பம் கதறல் குற்றவாளி தரப்பில் இருந்து எங்களுக்கு அச்சுறுத்தல்: போலீசில் புகாரளிக்க நீதிபதி அறிவுறுத்தல்

மதுரை: கொலையான விளாத்திகுளம் மாணவி குடும்பத்திற்கு அச்சுறுத்தல் இருப்பது குறித்து போலீசில் புகார் அளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே மாயமான 12ம் வகுப்பு மாணவி, காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்த தர்மமுனீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம், தர்மமுனீஸ்வரனுக்கு இரட்டை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மரண தண்டனை விதித்த நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுவது தொடர்பாக காவல்துறை தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தர்மமுனீஸ்வரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘வழக்கு தொடர்பாக போதுமான ஆவணங்கள் கிடைக்கவில்லை. எனவே மேல்முறையீடு செய்ய கால அவகாசம் வேண்டும்’ என்றார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் தரப்பில், ‘‘குற்றவாளி தரப்பில் இருந்து எங்களது குடும்பத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், சிறுமியின் குடும்பத்தினர் தரப்பில் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் புகார் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 29க்கு தள்ளி வைத்தனர்.

Tags : Madurai ,High Court ,Vilathikulam ,Thoothukudi ,
× RELATED செயற்கை நுண்ணறிவு கருவி எதுவாக...