லக்னோ: இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் இந்தியா வென்றது. 2வது போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால், 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ேராகித்சர்மா சிறப்பாக விளையாடி 6 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 48 ரன் எடுத்து போல்டானார். அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் சுப்மன் கில், இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தினர். சிறப்பாக விளையாடி வந்த இந்த ஜோடியை ஆப்கன் பந்துவீச்சாளர் கரோட்டி பிரித்தார். இஷான் கிஷன் 125 ரன்னிலும், சுப்மன் கில் 154 ரன்னிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த கே.எல்.ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும், ஸ்ரேயஸ் ஐயர் 26 ரன், குர்னூர் பிரார் 3 ரன், அர்ஸ்தீப் சிங் 3 ரன், வாசிங்டன் சுந்தர் 19 ரன், பிரின்ஸ் யாதவ் 5 ரன் எடுத்து வரிசையாக அவுட்டாகினர்.
இதனையடுத்து 49.5 ஓவரில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 402 ரன் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முதன் முறையாகவும், ஒட்டுமொத்தமாக 8வது முறையாகவும் இந்திய அணி ஒருநாள் போட்டியில் 400 ரன்களை கடந்தது. இதன் மூலம் அதிக முறை 400 ரன்களை அடித்து தென்ஆப்பிரிக்கா அணியுடன் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கரோட்டி 4, ரஷித்கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 403 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது.
தொடக்க வீரர் குர்பாஸ் 41, அடல் 42 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். மறுபுறம் தனிஆளாக போராடிய ரகமத்ஷா அரைசதம் அடித்தார். இறுதியாக 79 ரன் எடுத்து அவர் அவுட்டாக, ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 170 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 154 ரன்கள் குவித்த இந்திய கேப்டன் சுப்மன் கில், ஆட்டநாயகன் விருது வென்றார்.
