காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த சின்னபுங்கனேரி கிராமத்தை சேர்ந்தவர் ராவணன் (57), விவசாயி. இவரது மனைவி சித்ரா (50). தனது கணவரின் விவசாய வேலைகளுக்கு உதவியாக இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் வெளிநாட்டில் வசிக்கும் நிலையில், மற்றொரு மகன் திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஓராண்டாக இத்தம்பதி உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளனர். தங்களை உடனிருந்து கவனிக்க 2 மகன்களும், இல்லாததால் மனஉளைச்சல் அடைந்ததாக கூறப்படுகிறது. யாருக்கும் நாம் பாரமாக இருக்க கூடாது என கருதிய தம்பதி, நேற்று மாலை தங்களது வீட்டிற்கு அருகிலுள்ள வேப்ப மரத்தில் கயிற்றால் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தகவலறிந்து காட்டுமன்னார்கோவில் போலீசார் விரைந்து வந்து, தம்பதியரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராவணன், சித்ராவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி அவர்களது வீட்டை சோதனையிட்டனர். அப்போது இருவரும் தற்கொலை செய்வதற்கு முன்பு, தங்களது இறுதிச்சடங்கிற்கு தேவையான பொருட்களை வீட்டில் தயாராக வாங்கி வைத்துவிட்டு உயிரை மாய்த்திருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
