×

உ.பி, பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் 5 மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல்: நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்த ஆலோசனை

புதுடெல்லி; உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்து தேர்தல் ஆணையமும், ஒன்றிய அரசும் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்பட்டு, மார்ச் மாதம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. மற்ற மாநிலங்களில் பாஜ ஆட்சியில் உள்ளது. தற்போது இந்த மாநிலங்களின் ஆட்சி காலம் வரும் 2027ஆம் ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், வரும் 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற உள்ளன. ஒரே நேரத்தில் தேர்தல் மற்றும் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வதில் ஆள் பற்றாக்குறை ஏற்படும் என்பதால், தேர்தலை முன்கூட்டியோ அல்லது மே மாதத்திற்கு பின்னரோ நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அதிகளவில் தேவைப்படுவதால், இந்த முடிவை எடுக்க ஒன்றிய அரசுடன், தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

குறிப்பாக கோவா சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மார்ச் 14ஆம் தேதியும், மணிப்பூர் சட்டப்பேரவை பதவிக்காலம் மார்ச் 13ஆம் தேதியும், பஞ்சாப் சட்டப்பேரவை பதவிக்காலம் மார்ச் 16ஆம் தேதியும், உத்தரப்பிரதேச சட்டப்பேரவை மே 22ஆம் தேதியும், உத்தரகாண்ட் சட்டப்பேரவை பதவிக்காலம் மே 28ஆம் தேதியும் முடிவடைய உள்ளது. இந்த சமயத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தினால், மக்கள் தொகை கணக்கெடுப்பு பாதிக்கப்படும். ஏற்கனவே 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால் 6 ஆண்டுகள்கழித்து அடுத்த ஆண்டு தான் நடைபெற உள்ளது. இந்த சூழலில் தேர்தல் நடத்தினால், அதிக அதிகாரிகளை அதற்கு பணியமர்த்த வேண்டிய சூழல் ஏற்படும். எனவே கோவா, மணிப்பூர், பஞ்சாப் சட்டப்பேரவையுடன் உபி, உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு இறுதியிலேயே, அதாவது வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்துப் பேசிய ஆம்ஆத்மி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் 2027ம் ஆண்டு பிப்ரவரிக்கு பதிலாக, இந்த ஆண்டு நவம்பரிலேயே நடத்தப்படலாம் எனத் தெரிகிறது; எனவே முதல்வர் பகவந்த் மானை மீண்டும் வெற்றி பெறச் செய்ய உழையுங்கள்’ என்று கூறினார். இந்த வியூகம் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

  • 2027 பிப்ரவரியில் தொடங்கவுள்ள நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணியுடன் தேர்தல் கால அட்டவணை மோதாமல் இருக்க, அதே ஆண்டில் நடைபெறவுள்ள 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் முன்னதாகவே நடத்தப்படலாம்
  • தேர்தல் அட்டவணையை முடிவு செய்யும்போது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளையும் ஆணையம் கருத்தில் கொள்ளும். தேவைப்பட்டால் வாக்குப்பதிவு தேதிகளைச் சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் முன்னதாகவே நடத்துவது குறித்து ஆணையம் பரிசீலிக்கக்கூடும்.
  • ஏனெனில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்காக நியமிக்கப்படும் அரசு அதிகாரிகள் பெரும்பாலும் தேர்தல் பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பதால் தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.
Tags : UP ,Punjab ,Goa ,Manipur ,Uttarakhand ,New Delhi ,Election Commission ,Union Government ,Uttar Pradesh ,
× RELATED கண்ணூரில் இருந்து ஜெட்டா சென்ற...