×

திமுக பற்றி சர்ச்சை பேச்சு அமைச்சர் ஷாஜகானை கண்டித்து போஸ்டர்: பாபநாசத்தில் பரபரப்பு

 

தஞ்சை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணைந்து போட்டியிட்டது. தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ஷாஜகான், வாணியம்பாடியில் சையது பரூக் பாட்ஷா வெற்றி பெற்றனர். இந்நிலையில் தவெக அரசுக்கு முஸ்லிம் லீக் ஆதரவு தெரிவித்தது. தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இடம் ஒதுக்கப்பட்டது. சிறுபான்மை நலத்துறை அமைச்சராக ஷாஜகான் பதவியேற்றார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் விருதுநகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஷாஜகான் பேசுகையில், இன்னும் 50 ஆண்டுகளில் திமுக துடைத்து எறியப்படும் என்று கூறியுள்ளார். இந்த பேச்சு திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் பாபநாசம் பகுதியில் அமைச்சர் ஷாஜகானை கண்டித்தும், அவர் மன்னிப்பு கேட்க கோரியும் திமுக சார்பில் ஆங்காங்கே நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அந்த போஸ்டரில், கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்!! பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் திமுக தயவில் வெற்றி பெற்று திமுகவை விமர்சனம் செய்யும் “பச்சோந்தி” ஷாஜகானே மன்னிப்புக்கேள்! மன்னிப்புக்கேள்..!! பாபநாசம் வடக்கு ஒன்றியம் பேரூர் திமுக என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Minister ,Shahjahan ,DMK ,Papanasam ,Thanjavur ,Indian Union Muslim League ,Tamil Nadu ,Syed Farooq Badshah ,Vaniyambadi ,Muslim League… ,
× RELATED ஜாலியாக இருக்கவே ஐஏஎஸ் அதிகாரிகள்...