சென்னை: பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க கோரி சென்னையில் வரும் 18ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிவிப்பு: பெண்களையும், பெண் குழந்தைகளையும் பாதுகாக்கக் கோரியும் பாலியல் வன்முறை குற்றங்கள் தொடர்ந்து நடைபெறாமல் தடுக்கவும், நடவடிக்கைகள் எடுக்கவும் ஆளும் அரசினை வலியுறுத்தும் விதமாக, தமிழக பாஜக சார்பில் வருகின்ற 18ம் தேதி(வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் சென்னையில் எனது தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தினை மாநில துணைத் தலைவர் எம். சக்கரவர்த்தி மற்றும் மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்திட, மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.
சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக மாநில துணை தலைவர் டால்பின் தென்சென்னை மாவட்ட பொறுப்பாளராக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக என்ஜிஓ பிரிவு மாநில அமைப்பாளர் அர்ஜூன மூர்த்தி, மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக மாநில செயலாளர் ஆனந்த பிரியா, வடசென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக மாநில துணை தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், மாநில செயலாளர் எஸ்.சதீஷ்குமார், வடசென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில அமைப்பாளர் பெப்சி ஜி.சிவகுமார்,
சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில அமைப்பாளர் எம்.பாஸ்கரன், ஓபிசி அணி மாநில தலைவர் வீர திருநாவுக்கரசு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு நமது பெண்களையும், பெண் குழந்தைகளையும் பாதுகாக்க தமிழக அரசினை வலியுறுத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
