×

புழல் – பூண்டி நீர்த்தேக்கங்களில் குறைந்தது நீர் இருப்பு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: தூர்வாருவதில் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்

 

சென்னை: புழல் – பூண்டி உள்ளிட்ட மாநகரின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு குறைந்து வரும் நிலையில் தூர்வாரும் பணிகளில் அரசு முழு கனவம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னையின் குடிநீர் ஆதாரமாக புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை மற்றும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்கள் விளங்குகின்றன.

இதில் தற்போது புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் 50 சதவீதமாக நீர் இருப்பு குறைந்துள்ளது. செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஐந்து முக்கிய நீர்த்தேக்கங்களின் மொத்த சேமிப்பு தற்போது 6,148 மில்லியன் கன அடியாக உள்ளது. இது அவற்றின் மொத்த கொள்ளளவில் கிட்டத்தட்ட 52 சதவீதமாகும். புழல் மற்றும் பூண்டி நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு முறையே கிட்டத்தட்ட 51 சதவீதம் மற்றும் 34 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் இந்த நீர்த்தேக்கங்களில் வறண்ட நிலப்பரப்பு தெளிவாக தெரிகின்றது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: நகரத்தின் முதன்மை குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் மற்றும் பூண்டி நீர்த்தேக்கத்தில் வறண்ட பகுதிகள் உருவாகியுள்ளன. இங்கிருந்துதான் மற்ற நீர்த்தேக்கங்களுக்குத் தண்ணீர் திருப்பி விடப்படுகிறது. நீர்நிலைகளின் சேமிப்புத் திறனை மீட்டெடுக்க, சரியான நேரத்தில் தூர்வார வேண்டியதன் அவசியத்தை அரசு மேற்கொள்ள வேண்டும். புழல் அருகே உள்ள சூரப்பட்டு மற்றும் கண்ணப்பசாமி நகர் போன்ற இடங்களுக்கு அருகில் உள்ள பகுதிகள் வறண்ட நிலப்பரப்பு தெளிவாக தெரிகிறது.

மேலும், பாம்மாடுகுளம், பாடியநல்லூர் மற்றும் திருமுல்லைவாயலில் உள்ள வெங்கடாசலம் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடிநீரில் கழிவு நீர் கலக்கிறது. அதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பூண்டி நீர்த்தேக்கத்திற்கு ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து வினாடிக்கு சுமார் 210 கன அடி கிருஷ்ணா நதி நீர் வருகிறது. இது செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு திருப்பி விடப்பட்டு, நீர் மட்டத்தை உயர்த்தி நகரின் விநியோகத்தை எளிதாக்குகிறது.

கடந்த 2018ம் ஆண்டில், முக்கிய நீர்த்தேக்கங்களைத் தூர்வாரும் திட்டத்தை வருவாய் ஈட்டும் மாதிரியாகச் செயல்படுத்த நீர்வளத்துறை முடிவு செய்தது. சோழவரம் நீர்த்தேக்கத்தில் ஓரளவுக்குப் பணிகள் நடந்தாலும், ஐந்து நீர்த்தேக்கங்களிலும் சேர்த்து சுமார் 1,900 மில்லியன் கன அடி கூடுதல் கொள்ளளவை உருவாக்கும் நோக்கில் திட்டமிடப்பட்ட இந்த முழுமையான திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளில் நீர்நிலைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்ததே இதற்கு ஒரு காரணமாகும்.இவ்வாறு கூறினர்.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: கிருஷ்ணா நதி நீரால் 450 மில்லியன் கன அடி பூண்டி நீர்த்தேக்கத்தில் உயர்ந்துள்ளது. சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் விடுவிப்பை அதிகரிக்க ஆந்திர அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தி வருகின்றோம். பூண்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை அதிகரிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். தூர்வாரும் பணிகளுக்கு வருவாய் ஈட்டும் மாதிரியை எவ்வாறு மிகவும் பயனுள்ளதாக மாற்றுவது என்பது குறித்தும் துறை ரீதியாக ஆலோசனை நடத்தி வருகின்றோம். இவ்வாறு கூறினர். முக்கிய ஏரிகளில் நீர் இருப்பு குறைந்துள்ளதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை காணப்படுகிறது.

Tags : Puzhal-Boondi ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று 16 இடங்களில்...