×

ஒரு நாளைக்கு 200 லிட்டர் மட்டுமே விநியோகம்; டீசல் கட்டுப்பாட்டால் மருத்துவமனைகள் பாதிப்பு: ஐடி நிறுவனங்கள், தொலைதொடர்பு சேவைகளுக்கும் சிக்கல்

புதுடெல்லி: ஒரு நாளுக்கு 200 லிட்டர் டீசல் மட்டுமே விற்பனை என்ற வரம்பு விதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைகள், செல்போன் டவர்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அத்தியாவசிய சேவைகளுக்கு இதில் விலக்கு அளிக்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசலை மொத்தமாக வாங்கும் தொழிற்சாலைகளுக்கு சந்தை விலையும், சில்லறை விற்பனை நிலையங்களில் (பெட்ரோல் பங்க்குகள்) பொதுமக்களுக்கான விலையும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தற்போது சில்லறை விலையில் லிட்டருக்கு 95.20 ரூபாய்க்கும், மொத்த விலையில் 134.50 ரூபாய்க்கும் டீசல் விற்கப்படுகிறது. இந்த மிகப்பெரிய விலை வித்தியாசத்தால் மொத்தமாக எரிபொருளை வாங்கும் நிறுவனங்கள் பெட்ரோல் பங்க்குகளை நாடின. இதன் விளைவாக, கடந்த மே மாதத்தில் மட்டும் ஐஓசி, பிபிசிஎல் மற்றும் எச்பிசிஎல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்க்குகளில் பெட்ரோல் விற்பனை 4.8 சதவீதமும், டீசல் விற்பனை 6.4 சதவீதமும் திடீரென அதிகரித்தது.

அதை தொடர்ந்து, கடந்த 11ம் தேதி ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெட்ரோல் பங்க்குகளில் டீசல் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், ஒரு வாடிக்கையாளர் அல்லது வாகனத்திற்கு ஒரு நாளைக்கு 200 லிட்டர் மட்டுமே டீசல் வழங்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக கட்டுப்பாட்டு உத்தரவு அடுத்த 90 நாட்களுக்கு அமலில் இருக்கும் எனவும், தேவைப்பட்டால் மேலும் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அவசர கால மின் தேவைக்காக டீசல் ஜெனரேட்டர்களை நம்பியிருக்கும் மருத்துவமனைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரிய மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் தடையற்ற மின்சாரம் வழங்க டீசல் ஜெனரேட்டர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மின் விநியோகத்தில் சிறிய தடை ஏற்பட்டால் கூட நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், இந்த கட்டுப்பாடு சுகாதார சேவைகளை பாதிக்கக்கூடும் என மருத்துவமனைகள் அச்சம் தெரிவித்துள்ளன.

தொலைத்தொடர்பு துறையும் இந்த உத்தரவால் பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. செல்போன் கோபுரங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு டீசல் மிகவும் அவசியமாகும். டீசல் விநியோகத்தில் ஏற்படும் எந்தவொரு பாதிப்பும் செல்போன் கோபுரங்களின் செயல்பாட்டை முடக்கி, சுமார் 130 கோடி வாடிக்கையாளர்களின் டேட்டா சேவைகளைப் பாதிக்கும் என டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குநர்கள் சங்கத்தினர் தொலைத்தொடர்புத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். மின்வெட்டு ஏற்படும் சமயங்களில் அவசர கால தொடர்புகள் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அதிகரித்துவரும் மின் தேவையை சமாளிக்க ஐடி நிறுவனங்கள் மற்றும் டேட்டா சென்டர்கள் ஜெனரேட்டர்களை பயன்படுத்தி வருகின்றன. டீசல் கிடைக்காத பட்சத்தில் உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரிக்கக்கூடும் என தொழில் துறை நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, அத்தியாவசிய சேவைகளான மருத்துவமனைகள் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு இந்த கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • பெட்ரோல் மற்றும் டீசலை மொத்தமாக வாங்கும் தொழிற்சாலைகளுக்கு சந்தை விலையில் எரிபொருள் விற்கப்படுகிறது.
  • பொதுமக்களுக்கான ெட்ரோல் பங்க்குகளில் சந்தை விலையைவிட குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை ஆகிறது.
  •  டீசல் சில்லறை விலையில் லிட்டருக்கு 95.20 ரூபாய்க்கும், மொத்த விலையில் 134.50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
  • அதாவது மொத்தமாக வாங்குவோருக்கு டீசல் விலை லிட்டருக்கு சுமார் 40 ரூபாய் அதிகமாக உள்ளது.
  • மொத்தமாக எரிபொருளை வாங்குவோர் பொதுமக்களுக்கான பங்க்குகளுக்கு படையெடுக்கின்றனர்.
  • இதனால் கடந்த மே மாதத்தில் மட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்க்குகளில் பெட்ரோல் விற்பனை 4.8 சதவீதமும், டீசல் விற்பனை 6.4 சதவீதமும் திடீரென அதிகரித்தது.

ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 2ம் இடத்தில் இந்தியா
இதற்கிடையே, இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவு மே மாதம் அதிகரித்தது. ரஷ்யாவிடம் இருந்து கடந்த மாதம் கிட்டத்தட்ட ரூ.63 ஆயிரம் கோடி அளவிற்கு ஹைட்ரோ கார்பன்கள் வாங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று குறித்த ஆராய்ச்சி மையம்(சிஆர்இஏ) தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து புதைப்படிவ எரிபொருளை ஆக அதிகமாக வாங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.

Tags : NEW DELHI ,EU government ,
× RELATED முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு நாளை விசாரணை!