காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: இந்தியா கூட்டணி கூட்டத்தில் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்

 

புதுடெல்லி: இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன்,” அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கேரளம், மேற்குவங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட அணுகுமுறை இந்த கூட்டணிக்கு உறுதுணையாக இருந்த கட்சிகளான திரிணாமுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக ஆகியவற்றை பலவீனம் அடையச் செய்திருக்கிறது. இது விரும்பத்தக்கது அல்ல. எனவே காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறையை மறு ஆய்வு செய்து இந்த ஒற்றுமையை இன்னும் வலுவாக முன்னெடுப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்.
இந்தியா கூட்டணியில் தேசியக் கட்சிகளும் மாநில கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். இயல்பாகவே தேசியக் கட்சிகளுக்கும் மாநில கட்சிகளுக்கும் இடையே முரண்களும் இருக்கும்.

அவற்றை கூர்மைப்படுத்தக்கூடாது. அந்தப் பொறுப்பு மாநில கட்சிகளுக்கு மட்டுமல்ல தேசிய கட்சிகளுக்கும் உள்ளது என்றார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ,” காங்கிரஸ் தலைமையில் எந்தவிதமான சிறு கருத்து வேறுபாடுகளுக்கும் இடம் கொடுக்காமல் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,” கருத்து தெரிவிக்க வைகோ மறுத்துவிட்டார்.

 

Related Stories: