×

தவெகவுக்கு உழைத்ததற்கு கூலி கூட்டு பலாத்காரம்: பாதிக்கப்பட்ட விஜய் ரசிகை மீண்டும் கதறல்

 

தூத்துக்குடி: தமிழக வெற்றி கழகத்தில் இருந்ததற்காகவும் கட்சி வெற்றிக்காகவும் உழைத்ததற்காக கிடைத்த கூலி தான் கூட்டு பாலியல் பலாத்காரம். புகார் அளித்த என்னை கட்சியிலிருந்து நீக்கி உள்ளனர் என ஏரல் அருகே பாதிக்கப்பட்ட விஜய் ரசிகை மீண்டும் கதறி அழுதபடி கூறினார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய தவெக நிர்வாகிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் ராதிகா தூத்துக்குடியில் அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தவெக மேற்கு பகுதி துணைச்செயலாளராக கடந்த இரு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டு தற்போது ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏவாக இருக்கும் சரவணனின் வெற்றிக்காக பாடுபட்டவர். இந்நிலையில் கடந்த மே 3ம்தேதி இளம்பெண்ணை வேலை வாங்கித் தருவதாக கூறி தவெக நிர்வாகியான ஸ்ரீவை ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாலா என்ற பாலசுப்பிரமணியன் மற்றும் ராம்நாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் ஆகிய இருவரும் பாதிக்கப்பட்ட இளம்பெண் மற்றும் மற்றொரு பெண்ணை காரில் அழைத்து சென்றனர். குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை ஏர்வாடி அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட இளம்பெண் தவெக நிர்வாகிகள் பால சுப்பிரமணியன் மற்றும் ஜெயபால் ஆகியோர் தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக ஸ்ரீவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, காவல்துறையினர் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பால சுப்பிரமணியனையும், ஜெயபாலையும் கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவருக்கும் கடும் தண்டனை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக செயல்படும் முக்கிய பிரமுகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதோடு அந்த பெண் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே அப்பெண்ணின் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை மிக அதிக அளவில் நடந்து கொண்டிருக்கிறது. காவல்துறையை கையில் வைத்திருக்கிற விஜய் உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வளவு மோசமாக சம்பவங்கள் நடப்பதற்கு காரணமாக இருப்பது போதை தான். ஆட்சிக்கு வந்தவுடன் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று முதல்வர் விஜய் கூறினார். ஆனால் பல்வேறு பகுதிகளில் இன்னும் டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை.

நேற்று கூட திருச்சியில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார். இதில் 7 சிறார்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் சொல்ல முடியாத அளவிற்கு குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்து வருவதை கவலையோடு பார்க்கிறோம் என்றார். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில் ‘‘கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முந்தைய தினம் தன்னை தவெக நிர்வாகிகள் பாலமுருகன், ஜெயபால் ஆகியோர் வேலை வாங்கி தருவதாக காரில் அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் காரில் செல்லும்போது எனக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை அதிக அளவில் கொடுத்து என்னை ஏர்வாடி அருகேயுள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இது தொடர்பாக வெளியே கூறினால் தமிழக முதல்வர் விஜய் மற்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு தான் கெட்ட பெயர் ஏற்படும். எனவே இது தொடர்பாக புகார் அளிக்கக்கூடாது என மிரட்டினர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன். இதில் பால சுப்பிரமணியன் மற்றும் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் ஆதவ்அர்ஜுனா மற்றும் புஸ்சி ஆனந்த் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளேன்.

ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பவம் குறித்து புகார் அளிக்கும்போது சட்டமன்ற உறுப்பினர் சரவணன் குறித்தும் புகார் அளித்தபோது அவர் சட்டமன்ற உறுப்பினர் அவர் மீது எல்லாம் நீங்கள் புகார் அளிக்கக்கூடாது என காவல்துறையினர் மிரட்டினர். தமிழக வெற்றி கழகம் சார்பில் என்னை அழைத்து இதுவரை எதுவும் கேட்கவில்லை. இதுதான் நான் தமிழக வெற்றி கழகத்தில் இருந்ததற்காகவும் கட்சி வெற்றிக்காகவும் உழைத்ததற்காகவும் கிடைத்த கூலி தான் பாலியல் பலாத்காரம் அதுவும் கூட்டு பாலியல் பலாத்காரம். புகார் அளித்த என்னை தமிழக வெற்றி கழகத்திலிருந்து நீக்கி உள்ளனர் என கண்ணீர் மல்க தெரிவித்தார். தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை மிக அதிக அளவில் நடந்து கொண்டிருக்கிறது. காவல்துறையை கையில் வைத்திருக்கிற விஜய் உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்னொரு பெண்ணும் கூட்டு பலாத்காரம்
பாதிக்கப்பட்ட பெண் மேலும் கூறுகையில், இந்த சம்பவத்தில் என்னுடன் வந்த மற்றொரு பெண்ணையும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த பெண் தன்னுடைய குடும்பச் சூழ்நிலை கருதி இந்த சம்பவத்தில் புகார் அளிக்காமல் இருந்து வருகிறார். காவல்துறை இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றம் வேண்டும் என்று தான் தமிழக மக்கள் வாக்களித்தார்கள் ஆனால் அந்த மாற்றத்தை நீங்கள் தற்போது பார்த்து வருகிறீர்கள். புகார் மனு மீதும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்

Tags : Vijay ,Tamil Nadu ,Victory Party ,Airal ,
× RELATED இன்ஸ்டாகிராம் பெண்ணுக்காக காவல்...