×

இன்ஸ்டாகிராம் பெண்ணுக்காக காவல் நிலையம் முன்பு கல்லூரி மாணவர்கள் மோதல்: போலீஸ் வாகனம் கல்வீசி உடைப்பு

 

நாகர்கோவில்: குமரி அருகே இன்ஸ்டாகிராமில் பேசிய பெண்ணை சொந்தம் கொண்டாடுவது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் காவல் நிலையம் முன்பு மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தொலையாவட்டம் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2ம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கும் கோணம் பகுதியில் உள்ள கல்லூரியில் பிபிஏ 3ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த 6 மாதங்களாக இன்ஸ்டாகிராமில் பேசி பழகி வந்துள்ளனர்.

இந்தநிலையில் மாணவி படிக்கும் அதே கல்லூரியில் ஆரல்வாய்மொழியை சேர்ந்த 20 வயது மாணவரும் படித்து வருகிறார். ஆரல்வாய்மொழி மாணவரும், மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி பழகி வந்து உள்ளார். இதையடுத்து ஆரல்வாய்மொழி மாணவருக்கு, தான் பேசும் மாணவியுடன் தொலையாவட்டத்தை சேர்ந்த மாணவர் இன்ஸ்டாகிராமில் பேசுவது தெரியவந்தது. இதனால் கோபம் அடைந்த ஆரல்வாய்மொழி மாணவர் இன்ஸ்டாகிராமில் சாட் மூலம் தொலையாவட்டத்தை சேர்ந்த மாணவரை தொடர்பு கொண்டு, எப்படி நான் பேசும் பெண்ணிடம் நீ பேசலாம் என கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் மாறி மாறி வசைபாடி வந்துள்ளனர்.

இதற்கிடையே 2 பேரும் நேரில் பேசி பிரச்னைக்கு முடிவு கட்டலாம் என கூறியுள்ளனர். அப்போது தொலையாவட்டம் மாணவர், நீ கருங்கலுக்கு வா பேசலாம் என அழைத்துள்ளார். இதையடுத்து ஆரல்வாய்மொழி மாணவர் தனது நண்பர்கள் 6 பேருடன் நேற்று கருங்கல் போலீஸ் முன்பு சென்று தொலையாவட்டம் மாணவரை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். தொடர்ந்து அவரும் தனது நண்பர்கள் சிலருடன் கருங்கல் காவல் நிலைய பகுதிக்கு சென்றார். காவல் நிலையம் அருகே ஒரு பெண்ணுக்காக இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தநேரம் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்க தொடங்கினர். அந்தசமயம் மோதலில் சிலர் அங்கு கிடந்த கற்களை எடுத்து தாக்கி கொண்டனர்.

இதனால் காவல் நிலைய பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இவ்வாறு மோதல் நடந்து கொண்டிருந்தபோது இன்ஸ்பெக்டரின் வாகனம் காவல் நிலையத்துக்கு வந்தது. அந்த நேரம் இருதரப்பினரில் ஒருவர் தூக்கி எறிந்த கல் போலீஸ் வாகன கண்ணாடியில் பட்டு உடைந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் இருதரப்பு வாலிபர்களையும் மடக்கி பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் வாலிபர்களும் நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் சுதாரித்து கொண்ட போலீசார் தொலையாவட்டத்தை சேர்ந்த 4 வாலிபர்களை பிடித்தனர். மேலும் மற்றொரு தரப்பை சேர்ந்த 2 பேரையும் பிடித்தனர்.

இதனை தொடர்ந்து பிடிபட்ட 6 பேரையும் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Instagram ,Nagercoil ,Kumari ,Karungal ,Kanyakumari ,
× RELATED சீரான மின்விநியோகம் இல்லாததால்...