புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து கடந்த ஓராண்டில் மட்டும் 3,500 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கண்டறிந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 3,567 இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘நடப்பு ஆண்டில் இதுவரை (கடந்த 5 மாதத்தில்) 1,076 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் நெருக்கமான தொடர்பில் இருந்து வருகின்றன. குறிப்பாக, சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் அதே வேளையில், சட்டப்பூர்வமான குடியேற்றம் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் இரு நாடுகளும் உறுதியாக உள்ளன. மேலும், குடியேற்றம் மற்றும் இடமாற்றம் தொடர்பான புதிய வியூகம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்’ என்றார்.
