சென்னை: கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், ஆனந்தன், எம்.சி.சம்பத் ஆகிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் நேற்று தவெகவில் இணைந்தனர். அவர்களின் ஆதரவாளர்கள் பின்வாசல் வழியாக தவெக அலுவலகத்தில் நுழைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக கட்சி 107 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்நிலையில், தவெக, திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. 59 இடங்களில் வென்ற திமுக எதிர்கட்சி என்ற இடத்தைப் பெற்றுள்ளது. அதேநேரம், 47 இடங்களில் மட்டுமே வென்ற அதிமுக எதிர்கட்சி என்ற இடத்தைக் கூட அடைய முடியாமல் போனது. அதன் காரணமாக அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது அதிருப்தியை ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு தரப்பு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால், அதற்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் காரணமாக அதிமுக அணிகள் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டது. தொடர்ந்து, மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் உள்ளிட்ட 4 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
மேலும், சில அதிமுக நிர்வாகிகளும் கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணையும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, “90% அதிமுகவினர் நம்பக்கம் வருவார்கள்” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் கண்டனங்களும் எழுந்தன. இந்தச் சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நேற்று தங்களைத் தவெகவில் இணைத்துக்கொண்டனர்.
அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், ஆனந்தன், எம்.சி.சம்பத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இளவரசன், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர்ராஜ், ராஜமுத்து, மான்ராஜ், ராஜவர்மன் பன்னீர்செல்வம், மு.முருகன், என்.சிவா மற்றும் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.காமராஜ், எம்.எஸ்.சண்முகம் மற்றும் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த மாநில, மாவட்ட, பகுதி, நகர, வட்ட, ஒன்றிய மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட 2500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் முன்னிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
முன்னதாக நேற்று காலை 10 மணிக்கு தவெக தலைமை அலுவலகத்தில் இணைப்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுகவினர் 10 மனிக்கு முன்னதாகவே பனையூர் தவெக அலுவலக வாயிலில் திரண்டனர். ஆனால், 11 மணிவரை தவெக அலுவலக நுழைவாயில் திறக்கப்படவில்லை. அதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் தவெக அலுவலகத்திற்கு வெளியில் காத்துக்கிடந்தனர். தவெக அலுவலகத்திற்கு மொத்தம் 2 நுழைவாயில்கள் உள்ளன. 2 நுழைவாயில்களிலும் அதிமுகவில் இருந்து தவெகவில் இணைய வந்தவர்களின் ஆதரவாளர்கள் அனுமதிக்கபடவில்லை. அதனால், அதிமுகவில் இருந்து தவெகவில் இணைய வந்தவர்களின் ஆதரவாளர்கள் பின்பக்க கதவைத் தள்ளி உள்நுழைய முயன்றனர். அப்போது அனைவரும் ஒரே நேரத்தில் உள்ளே செல்ல முயன்றதால் பின்பக்க நுழைவாயிலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கூறுகையில், ‘‘முதல்வர் விஜய் அரசியல்வாதி அல்ல. முழுக்க முழுக்க மக்களுக்குச் சேவை செய்யும் மனிதர். எக்காரணத்தைக் கொண்டும் உங்களுக்கு மரியாதை இல்லாமல் நாங்கள் நடக்கமட்டோம்,’’ என்றார். முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘ஜெயலலிதா இறந்த பிறகு கடந்த 9 ஆண்டுகளாக எங்கே செல்வது என்று தெரியாமல் மனப் புழுக்கத்தில் இருந்தோம். வாரியத் தலைவர் உள்ளிட்ட எதையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை; எங்களுக்கு மரியாதை கொடுத்தால் போதும்,’’ என்றார். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், ‘‘தவெகவில் இணைய தாயுள்ளத்தோடு ஒப்புதல் அளித்த பொற்கால முதலமைச்சர் விஜய்க்கு நன்றி. எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை; உங்களின் எதிர்பார்பு என்னவோ அதற்கு ஏற்றவாறு பணியாற்றுவோம்,’’ என்றார்.
சோபாவுக்காக சேர்ந்தார்களா?:
நேற்று அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சியில் மிகப்பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றவர்கள். ஆனால், அவர்கள் தவெகவில் இணையும் விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ளவில்லை. என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டவர்கள் தான் கலந்துகொண்டனர். தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் தலைமையில் கட்சியில் இணையாமல், முதல் போட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தலைமையில் தான் கட்சியில் இணைகிறார்கள் எனச் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். மேலும் சோபா வரும் என்று எதிர்பார்த்து சேர்ந்துள்ளதாகவும் விமர்சித்து வருகின்றனர்.
அதிமுகவினர் 50 சதவீதம் பேர் எங்களுடன் பேப்பரில் மட்டும்தான் எடப்பாடி பொதுச்செயலாளராக உள்ளார்: ஆதவ் அர்ஜூனா பேச்சு
அதிமுகவினர் 50 சதவீதம் பேர் எங்களுடன் உள்ளனர், எடப்பாடி பழனிசாமி பேப்பரில் மட்டும்தான் அதிமுக பொதுச்செயலாளராக உள்ளார், என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். அப்போது, ஆதவ் அர்ஜூனா பேசியதாவது: அதிமுக மாற்றுக் கட்சியில்லை; இது தாய் கட்சி. அதிமுகவும் தவெகவும் ஒரே குடும்பம். 2 கட்சிக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. மதுரையில் நடைபெற்ற மாநட்டில் அண்ணாவையும், எம்ஜிஆரையும் வழிகாட்டியாக ஏற்றுகொண்டார் விஜய். மற்ற கட்சிகளில் உள்ளது போல் தவெகவில் அதிகார போட்டி கிடையாது. செங்கோட்டையனுக்கு இந்த கட்சியில் வழங்கப்படும் மரியாதை, உங்களுக்கும் வழங்கப்படும். ஒட்டுமொத்த அதிமுகவும் அதன் தொண்டர்களும் இங்குதான் உள்ளார்கள். அதிமுகவினர் ஓட்டு இல்லாமல் தவெகவின் இந்த வெற்றி நடந்திருக்காது. ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுகவினர் எங்கள் தலைவரை ஆதரிக்கின்றனர்.
முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கு வரும் சூழலை உருவாக்கியவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். அவர் பேப்பரில் மட்டும்தான் பொதுச்செயலாளராக உள்ளார். மக்கள் மற்றும் தொண்டர்கள் மனதிலும் ஜெயலலிதாவிற்குப் பிறகு இன்னமும் யாரும் பொதுச்செயலாளராக உருவாகவில்லை. திமுகவில் உள்ள கலைஞரின் உண்மையான விசுவாசிகளை தவெகவிற்கு வரவேற்கிறோம். 90 சதவீதம் அதிமுகவினர் நம் பக்கம் வருவார்கள் என்று சொன்னேன்; அதில் 50 சதவீதம் நிறைவேறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
