×

பாவூர்சத்திரம் அருகே சாலை, தெருக்களில் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற சட்டக்கல்லூரி மாணவர்: கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

 

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகே சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு, இந்தோனேசியாவில் நடைபெற்ற இண்டர்நேஷனல் போட்டியில் சட்டக்கல்லூரி மாணவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகேயுள்ள சாலைப்புதூரை சேர்ந்த முத்துராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி தாயார் சண்முகதாய் இவர் பீடி சுற்றும் தொழிலாளி. இவர்களது மகன் சந்தோஷ் (19). சட்டக்கல்லூரி மாணவரான இவர் சிறுவயதிலேயே ஸ்கேட்டிங்கில் அதிகம் ஆர்வம் கொண்டவர். அவர் பள்ளி படிக்கும் போதே சாலை, தெருக்களில் ஸ்கேட்டிங்கிற்காக பயிற்சி எடுத்து கொண்டார். கிராமம் என்பதால் அவருக்கு ஸ்கேட்டி பயிற்சி மேற்கொள்ள எந்த வசதியும் இல்லை.

ஆனாலும் அவர் கடுமையாக உழைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றார். சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியிலும், கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வென்றார். இதைதொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தோனேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஊர் திரும்பிய சந்தோஷிற்கு அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவருக்கு இனிப்புகள் ஊட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தங்கப்பதக்கம் வென்ற மாணவர் சந்தோஷ் கூறுகையில், ‘எனக்கு சிறுவயதில் இருந்து ஸ்கேட்டிங்கில் ஆர்வம் அதிகம். பள்ளியில் படிக்கும் சமயத்தில் தெருக்களிலும், தார் சாலையிலும் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டேன். முதலில் தென்காசி மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற நான், மாநில அளவில் மதுரையிலும், தேசிய அளவில் கோவையிலும் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசு வென்றேன். இதைத்தொடர்ந்து இந்தோனேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்று விளையாடினேன். இதில் பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்கள் கலந்து கொண்டதால் போட்டி மிகவும் கடினமாக இருந்தது.

இதில் 300 மீட்டர் போட்டியில் 4வது இடமும், 1000 மீட்டர் போட்டியில் 8வது இடமும் பெற்றேன். இறுதியில் நடைபெற்ற 400 மீட்டர் போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்று நம் மாவட்டதிற்கும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்ந்துள்ளேன். இப்போட்டியில் இந்திய அணி சார்பில் 70 பேர் கலந்து கொண்டதில் தமிழக வீரர்கள் 58 பேர் ஆவர். இதில் என்னை போன்று கிராமப்புற வீரர்கள் அதிகமானோர் கலந்து கொண்டனர். இவர்கள் முறையான ஸ்கேட்டிங் பயிற்சி மைதானம் இல்லாததால் சாலையில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

எனவே அரசு சார்பில் தென்காசி மாவட்டத்தில் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொள்ள மைதானம் அமைத்து தந்தால் என்னை போன்று கிராமப்புற மாணவர்கள் நன்கு பயிற்சி பெற்று பதக்கங்களை வென்று நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பர்’ என்றா்.

Tags : Pavursatram ,Pavurchathram ,International Competition ,Indonesia ,Pavoorsatram ,Muthuraj ,Tenkasi District ,
× RELATED சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலைக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு!