ஒருவரின் ராசியில் ஏழரைச்சனி வந்தாலே பயந்து நடுநடுங்குகிறார்கள். எனது ராசிக்கு ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கிறது, இது நடந்துவிடுமோ? அது நடந்துவிடுமோ? என ஜோதிடர்களிடம் பலரும் கேட்பதுண்டு. பொதுவாகவே, சனிபகவான் தீமைகளை மட்டுமே செய்பவர் என்கின்ற கூற்று நிலவிவருகிறது. அது மிகவும் தவறானது. சனி பகவானைப் போல், அள்ளியள்ளிக் கொடுப்பவர் யாரும் இருக்க முடியாது. இருப்பினும், சிலருக்கு சனி பகவானால், கடும் தோஷம் அதாவது `சனி தோஷம்’ ஏற்பட்டிருக்கும். அப்படி இருக்கும் நபர்களுக்கு, வரப்பிரசாதியாக “பெரிய ஆஞ்சநேயர்’’ அருள்கிறார்!
அனுமன் காலடியில் சனீஸ்வரன்
வேலூரை அடுத்த திருப்பத்தூர் மாவட்டத்தில், “அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர்’’ சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு, மூலவரான பெரிய ஆஞ்சநேயர் சுமார் 11 அடியில் கம்பீர அழகிய திருமேனியாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இக்கோயிலின்தலமரம், நெல்லி மரமாகும். இந்த ஆஞ்சநேயர் தெற்கு திசை நோக்கியும், இவரின் கண் பார்வை கிழக்கு திசையை பார்த்தபடியும், அருள்பாலித்துவருகிறார். பெரிய ஆஞ்சநேயரின் திருவடிகளில் சனீஸ்வர பகவான் இருக்கிறார். அதாவது ஆஞ்சநேயஸ்வாமி, சனீஸ்வரனின் மீது ஏறிநின்று காட்சி தருகிறார். அதனால்தான், சனிதோஷம் நிவர்த்திக்கு இந்த பெரிய ஆஞ்சநேயரை வேண்டிக் கொண்டால், நன்மை பயக்கும் என்று சொல்கிறார்கள்.
நாம் ஏற்கனவே கூறியதை போல், சனிதிசையோ அல்லது ஏழரைச்சனியோ வந்துவிட்டால், வாழ்வில் அனுபவிக்காத பல துயரங்களை அனுபவித்தே தீரவேண்டும் என்கின்ற பொதுவான கருத்து நிலவி வருகிறது.அப்படி துயரங்கள் வரும் சமயத்தில், “ராமா… ராமா…’’ என்று கூறினால் போதும், சனீஸ்வரனால் ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தையும் குறைத்து விடுவான் அனுமன், என்பதை உணர்த்தும் சம்பவம் ஒன்று ராமாயணகாலத்தில் நடந்துள்ளது. அதை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.
ராவணன் பிடியில் சனீஸ்வரன்
ராமபிரானுக்கும் ராவணனுக்கும் கடும் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், ராமனின் தம்பியான லட்சுமணருக்கு அடிப்பட்டு, அவர் மயங்கி கீழே விழுந்து கிடந்தார். அவரின் உயிரை காப்பாற்றிட தேவையான மூலிகை பொருட்கள்சஞ்சீவி மலையில் இருப்பதாக ஜாம்பவான் சொல்ல, அடுத்த நொடியில், “நான் சென்று மூலிகையை கொண்டு வருகிறேன்’’ என்று ராமரிடத்தில் அனுமன் தெரிவிக்க, ராமரும் அனுமனை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். அனுமன், சஞ்சீவி மலையை நோக்கி பறந்து சென்றார். அதே சமயத்தில் ராவணன், தன் தவவலிமையினால், நவகிரகங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். லட்சுமணனுக்காக, மூலிகையை எடுத்து செல்ல அனுமன் சஞ்சீவி மலையை நோக்கி வந்துகொண்டு இருக்கிறார்.
அவரை தடுத்து நிறுத்தும் சக்தி நவகிரகங்களுக்கு மட்டுமே உள்ளது. அதுவும் குறிப்பாக, சனிபகவானால்தான் அனுமனை தடுத்து நிறுத்த முடியும் என்று எண்ணிய ராவணன், சனிபகவானை அழைத்து, “இதோ… அனுமன் சஞ்சீவி மலையை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். லட்சுமணனுக்காக மூலிகையை எடுத்துச் செல்லாமல் இருக்க, அவரை தடுத்துவிட செய்ய வேண்டும்’’ என்று கட்டளையிடுகிறான். ராவணனின் கட்டுப்பாட்டில் இருக்கும் சனி பகவானால், ராவணனின் பேச்சை மீற முடியவில்லை. ஆகையால், ராவணனின் கட்டளைப்படி சனிபகவான் செயல்பட தொடங்கினார்.
எச்சரிக்கும் அனுமன்
அனுமன், சஞ்சீவி மலையை அடைந்து மூலிகை செடியினை தேடிக்கொண்டிருந்தார். நேரம் சென்று கொண்டே யிருந்தது. ஒரு கட்டத்தில், மூலிகையை கண்டெடுக்க முடியாததால்,
“ஜெய்……..ஸ்ரீ ராம்…………….’’ என்று சொல்லி சஞ்சீவி மலையையே கையினால் பெயர்த்து எடுத்தார். சஞ்சீவி மலையினை, ஒற்றைக்கையினால் தூக்கிக் கொண்டு லட்சுமணரை காப்பாற்ற, வேகமாக பறந்து கொண்டிருந்தார். அப்போது வழியில் சனிபகவான், அனுமனை தடுத்தார்.
“சஞ்சீவி மலையை எடுத்த இடத்திலேயே வைத்துவிடு…’’ – சனிபகவான் கேட்டார்
“காரணம்?’’ – அனுமன் பதிலுக்கு கேட்டார்
“ராவணனின் உத்தரவு’’ – சனிபகவான்
“அவனை நான் பிறகு கவனித்துக் கொள்கிறேன். நீ வெறும் அம்புதான். வீணாக என்னிடம் அடிபடாதே..’’ என்றார் அனுமன் “என்ன நடந்தாலும் சரி.. ராவணனை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது’’ என்றார் சனிபகவான்.“வீண் வாதம் செய்யவோ.. உன்னிடம் போர் புரியவோ நான் இங்கு வரவில்லை. லட்சுமணரை காப்பாற்றியாக வேண்டும். வழிவிடு’’ என அனுமன் சாந்தமாக கூறியும் சனிபகவான் வழிவிடவில்லை. ஒரு கட்டத்தில், பொறுமையை இழந்த அனுமன், சனியின் தலையில் தன் பாதத்தை வைத்து அழுத்தினார்.
வலியை பொறுத்துக்கொள்ள முடியாது; ராம நாமத்தால் தப்பித்த சனீஸ்வரன்
“ஸ்வாமி… என்னை விட்டுவிடுங்கள்.. என்னால் வலிதாங்க முடியவில்லை’’ என்று சனி கதறினார். இருந்தபோதும், அனுமன் விடவில்லை. இன்னும் பலமாக தன் பாதத்தை அழுத்தினார். இப்போது;“ராமா…ராமா…ராமா…’’ என்று இந்த முறை ராமபிரானின் பெயரை சொன்னார், சனி. அனுமன், ராமபக்தர் ஆயிற்றே! ஆகையால், ராமா… ராமா.. என்று சனி சொல்லச் சொல்ல, அனுமனின் பிடி சிறிது சிறிதாக தளர்ந்து, முழுவதுமாக சனியை விடுவித்தார், அனுமன்.
“ராம நாமத்தால் நீ உயிர் பிழைத்தாய். இதே போல், எவர் ஒருவர் ராம நாமத்தை ஜபிக்கிறார்களோ அவர்களை நீ துன்புறுத்தக் கூடாது’’ என்று ஆணையிடுகிறார், அனுமன்.
“நிச்சயம்! அப்படியே ஆகட்டும் ஸ்வாமி’’ என்று சனிபகவானும் சம்மதம் தெரிவித்து, வாக்கு கொடுக்கிறார். ஆகையால்தான், சனி பகவானால் பீடிக்கப்பட்டவர்கள் குறிப்பாக, ஏழரைச்சனியால் பீடிக்கப்பட்டவர்கள், அனுமனை வேண்டிக்கொண்டால் அந்த துன்பங்கள் சற்று குறையும் என்று நம் முன்னோர்களும், ஜோதிட வல்லுநர்களும் கூறுகின்றார்கள்.
இக்கோயிலில் ஆஞ்சநேயர், சனிபகவானை தன் பாதத்தால், அழுத்தும் திருக்கோலத்தில் காட்சியளிப்பதால், சனிதசை நடந்துகொண்டிருப்பவர்கள், சனிதோஷம் உள்ளவர்கள், ஏழரைச்சனியால் பீடிக்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து அனுமனை வழிபட்டால், சனியின் துன்பத்தில் இருந்து விடுபடலாம். மேலும், சனிக்கிரக தோஷம், கால சர்ப்ப தோஷம் ஆகியவை நீங்க, பரிகார தலமும்கூட.
கருடன் வட்டமிடுதல்
திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பல மக்களுக்கு பெரிய ஆஞ்சநேயர்தான் குலதெய்வமாக அருள்பாலித்து வருகிறார். ஆகையால், இவர்கள் வருடத்திற்கு ஒரு முறை பெரிய ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்திருந்து, கோயிலில் உள்ள கருட கம்பத்திற்கு, வேட்டி போன்றவற்றை சாற்றி மரியாதை செய்யப்படும். அதன் பின்பு, கருட கம்பத்தினை மூன்று முறை வலம் வருவார்கள்.
அந்த சமயத்தில், கருட கம்பத்தின் மேலே வானத்தில் கருடன் (கழுகு) வட்டமிடும் அதிசயம் நடைபெறும். கருடன் வட்டமிடுவதை கண்ட பின்னர் விளக்கு ஒன்றினை ஏற்றி பெரிய ஆஞ்சநேயரை வழிபாடு செய்வார்கள். கருடன் வட்டமிடவில்லை என்றால், உண்டியலில் 11 ரூபாய் காணிக்கை செலுத்தி, அடுத்த முறை காட்சி கொடு.. என்று வேண்டிக் கொள்வார்கள். இந்த சம்ரதாயம் காலந்தொட்டு செய்து வருகிறார்கள்.
ராகு கால விளக்கு ஏற்றுதல்
மேலும், திருமணத்தடை, குழந்தைப்பேறு தடை, செய்வினை, நவகிரக தோஷம் மற்றும் சகலவிதமான தோஷங்களும் நீங்கி, நோய் நீங்கி ஆரோக்கியம் பெற, ஞாயிற்றுக் கிழமைகளில் வரக்கூடிய ராகு காலமான மாலை 4.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் இக்கோயிலில் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பினை தரும். அதே போல்,
ஒரு தீபம் ஏற்றி வழிபட்டால், மன அமைதி கிடைக்கும்.
இரண்டு தீபம் ஏற்றி வழிபட்டால்,கணவன், மனைவி ஒற்றுமை ஓங்கும்.
மூன்று தீபம் – குழந்தைகளுக்கு நன்மை உண்டாகும்.
நான்கு தீபம் – வீட்டில் உள்ள தீமைகள் அகலும்.
ஐந்து தீபம் – பூர்வ புண்ணிய பாவம் விலகும்.
ஆறு – சத்ருக்கள் அழிவார்கள்.
ஏழு – ஏழ்மை விலகும்.
எட்டு – ஆயுள் விருத்தியாகும்.
ஒன்பது – நவகிரக தோஷங்கள் மற்றும் பிணிகள் அகலும்.
பன்னிரண்டு – ஜென்ம ராசிதோஷங்கள் நீங்கும்.
இருபத்தி ஏழு – நட்சத்திர தோஷங்கள் நீங்கும்.
நூற்றி எட்டு – நினைத்தது கைகூடும்.
ஐந்நூற்று நான்கு – விவாகத்தடை நீங்கி, திருமணம் கைகூடும்.
ஆயிரத்து எட்டு – சந்தான தோஷங்கள் நீங்கி, புத்திர சந்தானம் உண்டாகும். வியாபாரம் அபிவிருத்தி உண்டாகும்.
மேலும், இக்கோயிலில் தினமும் காலை 9.00 மணிக்கு கோபூஜை நடைபெறுகின்றன. அதே போல், தினமும் அன்னதானமும் நடைபெறுகிறது. தற்போது, திருப்பணி நடைபெற்று வருவதால் கைங்கர்யம் செய்ய தொடர்புக்கு: 9443390140.
திருவிழாக்கள்
சித்ரா பௌர்ணமி, ஸ்ரீ ராமநவமி, அனுமன் ஜெயந்தி, புரட்டாசி மாத விழாக்கள் ஆகியவை சிறப்பாக நடைபெறும். மேலும், பிரதி மாதம் பௌர்ணமி அன்று சத்யநாராயண பூஜையும், அமாவாசை அன்று ஊஞ்சல் சேவையும் நடைபெறும்.
கோயில் நடைதிறப்பு
காலை: 6.00 முதல் 12.00 வரை, மாலை: 4.00 முதல் 8.00 வரை. சனிக் கிழமைகளில், காலை: 5.00 முதல் 1.00 வரை, மாலை: 4.00 முதல் 9.00 வரை.
எப்படி செல்வது?
வேலூரை அடுத்த ஆம்பூரில் இருந்து 3 கி.மீ., பயணித்தால், இக்கோயிலை அடையலாம்.
ரா.ரெங்கராஜன்
