- திருச்சி ஜி.எச்
- சீதலட்சுமி
- செட்டு-கலைச்செல்வி
- மணக்குடிப்பட்டி
- தொண்டைமான் நல்லூர்
- குளத்தூர் தாலுகா
- புதுக்கோட்டை
திருச்சி: திருச்சி ஜி.ஹெச்சில் நர்சிங் மாணவி சாவுக்கு ‘டெக்ஸாமெதாசோன்’ மருந்தே காரணம்? என்று முதல்கட்ட ஆய்வறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா தொண்டைமான் நல்லூர் அருகே உள்ள மணக்குடிபட்டியை சேர்ந்த சேட்டு-கலைச்செல்வி தம்பதி மகள் சீதாலட்சுமி (21). திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் அரசு செவிலியர் கல்லூரியில் 3ம் ஆண்டு நர்சிங் படித்து வந்த சீதாலட்சுமிக்கு, மூக்கில் சதை வளர்ச்சி பாதிப்பு இருந்தது.
இதற்காக அவர் தான் படிக்கும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே பரிசோதனை செய்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், உடனடியாக மூக்கில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதையடுத்து, சீதாலட்சுமி சிகிச்சைக்காக கடந்த மாதம் 21ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூக்கில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்தது. முன்னதாக அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. சிறிது நேரத்திலேயே மாணவி உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் சீதாலட்சுமி இறந்ததாக கூறி சக மாணவிகள் குற்றச்சாட்டினர்.
இதுகுறித்து ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட உயர்மட்ட குழு விசாரணை மேற்கொண்டது. அப்போது மாணவி இறப்புக்கு சில தினங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சையின்போது அதே மருந்து செலுத்தப்பட்ட மேலும் 3 நோயாளிகளுக்கு இதய பாதிப்புகள் ஏற்பட்டது அம்பலமானது. திருச்சி அரசு மருத்துவமனைக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் 4000 ‘டெக்ஸாமெதாசோன்’ (மூச்சு திணறல் வராமல் தடுக்க பயன்படும்) குப்பிகள் வழங்கப்பட்டது.
இதில் 3500க்கும் மேற்பட்ட மருந்துகள் ஏற்கனவே நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுத்தப்பட்ட நிலையில் 300 குப்பிகள் கையிருப்பில் இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் 4 பேர் கொண்ட நிபுணர் குழு தனது முதல்கட்ட அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
அதில் மாணவியின் உயிரிழப்புக்கு ‘டெக்ஸாமெதாசோன்’ மருந்து காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளதாகவும், அந்த மருந்தின் தரத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ‘டெக்ஸாமெதாசோன்’ மருந்தை பயன்படுத்த தடை விதித்து தமிழக சுகாதார துறை, அரசு மருத்துவமனைகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
