புதுடெல்லி: விடைத்தாள் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டிற்கான பிரத்யேக இணையதள வசதியை பயன்படுத்தி 44,000 மாணவர்கள் எந்த சிக்கலும் இன்றி மறுமதிப்பீட்டு விண்ணப்பத்தை நிறைவு செய்திருப்பதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பீட்டில் அதிருப்தி அடைந்த மாணவர்களுக்காக, விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளில் காணப்படும் சிக்கல்களை சரிபார்ப்பதற்கும், விடைகளை மறுமதிப்பீடு செய்வதற்கும் பிரத்யேக இணையதளம் நேற்று முன்தினம் செயல்பாட்டிற்கு வந்தது. முன்னதாக மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக மாணவர்கள், பெற்றோர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், கடந்த 29ம் தேதி செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் பிரத்யேக இணையதளம் திறக்கப்பட்டது. இதில் நேற்று பிற்பகல் நிலவரப்படி 44,000 மாணவர்கள் எந்த சிக்கலும் இன்றி மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்துள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. பிரத்யேக இணையதளம் மூலம் 4,924 மாணவர்கள் விடைத்தாள் சரிபார்ப்புக்காகவும், 39,056 மாணவர்கள் மறுமதிப்பீட்டிற்காகவும் விண்ணப்பித்துள்ளனர்.
