×

அந்நிய செலாவணிக்காக ரூ.1.15 லட்சம் கோடி தங்கத்தை விற்றதா ரிசர்வ் வங்கி?: புளூம்பெர்க் குற்றச்சாட்டால் பரபரப்பு

மும்பை: அந்நிய செலாவணிக்காக ரூ.1.15 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கத்தை ரிசர்வ் வங்கி விற்றதாக புளூம்பெர்க் தெரிவித்த குற்றச்சாட்டை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. உலகின் மூன்​றாவது மிகப்​பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடாக இந்தியா விளங்குகிறது. இந்நிலையில், மத்திய கிழக்​கில் நில​வும் மோதல் போக்கு காரணமாக கடும் பொருளா​தார நெருக்​கடியை இந்தியா சந்​தித்து வருகிறது. எரிபொருள் விலை​யேற்​றம் மற்​றும் உள்​நாட்டு நாணய மதிப்​பின் வீழ்ச்சி ஆகியவை இந்​தி​யா​வின் அந்நியச் செலாவணி இருப்​புக்கு பெரும் சவாலாக மாறி​யுள்​ளன.இந்நிலையில், அந்நியச் செலாவணி வெளி​யேற்​றத்​தைக் குறைத்து, பொருளா​தா​ரத்தை நிலைநிறுத்​து​வதற்​கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தீவிரப்​படுத்​தி​யுள்​ளது. அதன் ஒரு பகுதியாக, எரிபொருள் விலை​யேற்​றம் மற்​றும் விலை மதிப்புள்ள உலோகங்​கள் மீதான இறக்​குமதி வரி கணிச​மாக உயர்த்தப்பட்டுள்​ளது.

இதன் தொடர்ச்சியாக, கையிருப்பு தங்கத்தில் ஒரு பகுதியை ரிசர்வ் வங்கி விற்பனை செய்திருக்கலாம் என புளூம்​பெர்க் எகனாமிக்ஸ் அமைப்​பின் மூத்த இந்​தி​யப் பொருளா​தார நிபுணர் அபிஷேக் குப்தா குறிப்பிட்டிருந்தார். “மே 22-ம் தேதி​யுடன் முடிவடைந்த 2 வாரங்​களில், ரிசர்வ் வங்கி சுமார் ரூ.1.15 லட்சம்மதிப்​புள்ள தங்​கத்தை விற்​பனை செய்திருக்​கலாம். இதன் மூலம், ரிசர்வ் வங்கி தனது அந்​நியச் செலா​வணி சொத்து மதிப்​பில் சுமார் 750 கோடி வரை சேர்த்​திருக்​கலாம்” என்று அபிஷேக் குப்தா கூறி இருந்தார். இது குறித்த செய்தி பரவலாக செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகின. இந்நிலையில், இதனை ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதற்கு விளக்கம் அளித்து ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்த செய்திகள் உண்மையானவை அல்ல. இதுபோன்ற விவகாரங்களில் ரிசர்வ் வங்கி தரப்பில் வெளியிடப்படும் தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’’ என கூறி உள்ளது. மேலும், தங்கத்தின் கையிருப்பு 880.52 டன்களாக எந்த மாற்றமும் இன்றி நிலையாக இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியிடம் தற்போது இருக்கும் தங்கம் எவ்வளவு?;
ரிசர்வ் வங்கியிடம் மார்ச் 31, 2025 நிலவரப்படி 879.58 மெட்ரிக் டன்களாக இருந்த ரிசர்வ் வங்கியின் மொத்தத் தங்க இருப்பு, மார்ச் 31, 2026 நிலவரப்படி 880.52 மெட்ரிக் டன்களாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அந்த ஆண்டில் தங்க இருப்பில் 0.94 மெட்ரிக் டன் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி வழக்கமாக தனது அந்நிய செலாவணி இருப்பை பயன்படுத்துகிறது. மேற்கு ஆசியா போருக்குப் பிறகு கச்சா எண்ணெய் உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. அதிகபட்சமாக ஒரு டாலர் ரூ.96.86 வரையிலும் சென்றுள்ளது. கடந்த பிப்ரவரி 27 அன்று முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி இருப்பு 728.494 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சத்தை எட்டியிருந்தது. ஆனால், மத்திய கிழக்கு மோதல் தொடங்கிய பிறகு, ரூபாய் கடும் அழுத்தத்திற்கு உள்ளானதால், ரிசர்வ் வங்கி டாலர்களை விற்பனை செய்வதன் மூலம் அந்நியச் செலாவணி சந்தையில் தலையிட வேண்டியதாயிற்று. இதன் விளைவாக, அடுத்தடுத்த பல வாரங்களுக்கு இந்த இருப்பு குறைந்து வந்தது. மே 22 அன்று முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 7.511 பில்லியன் அமெரிக்க டாலர் குறைந்து, 681.384 பில்லியன் அமெரிக்க டாலராக நின்றது.

மோடி பதில் அளிக்க கெஜ்ரிவால் கோரிக்கை;
ரிசர்வ் தங்கத்தை விற்றதா? இல்லையா? என்கிற உண்மையை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,‘நாட்டின் தங்கத்தின் ஒரு பகுதி விற்கப்பட்டுவிட்டது என்ற செய்தி உண்மையாக இருந்தால், அது மிகவும் தீவிரமான விஷயம். இந்த விவகாரம் குறித்து அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். நாடு தனது தங்கத்தை விற்க நிர்பந்திக்கப்பட்டால், நாட்டின் பொருளாதார நிலைமை நன்றாக இல்லை என்று அர்த்தம். இந்த விவகாரம் குறித்து அரசு உண்மையை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். நாட்டின் பொருளாதார நிலவரம் குறித்து அரசு எதையும் வெளியிடவில்லை. நாட்டின் உண்மையான நிலவரம் குறித்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்,’ என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags : Reserve Bank ,Bloomberg ,Mumbai ,India ,Middle East ,
× RELATED முதல் கணவருடன் விவாகரத்து கோரிய...