×

6 மாநிலங்களில் அதிரடி மாற்றம்; செல்வப்பெருந்தகை பதவி பறிப்பு?.. காங்கிரஸ் மேலிடத்தின் முடிவால் பரபரப்பு

 

* தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் உடையும் அபாயம்

புதுடெல்லி: வரும் 2029ம் ஆண்டு பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்களை செய்ய மேலிடம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் மாநில தலைவரை மாற்றினால் கட்சி உடையும் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்கள் மற்றும் கர்நாடகாவில் சுமூகமாக நடந்த ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, காங்கிரஸ் மேலிடம் கட்சிக்குள் அதிரடி மாற்றங்களை செய்ய தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சி கொடுத்த வாக்குறுதியின்படி, ஆந்திர மாநில தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளாவை கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவுக்கு அனுப்பவும், 2022ம் ஆண்டு தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் பதவியை துறந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கிரிஷ் சோடங்கருக்கு மீண்டும் கோவா பொறுப்பு வழங்கவும் ஆலோசனைகள் நடந்துள்ளன. ராகுல் காந்தி மற்றும் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நடத்திய சந்திப்பில், வரும் 2029ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இளம் தலைவர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அளவிலும், மாநில பிரிவுகளிலும் புதிய முகங்களை கொண்டு வர தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் விரைவில் மாற்றப்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் செல்வபெருந்தகை செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் அவரை மாற்றவும், கேரளாவில் அமைச்சர் பொறுப்பேற்றுள்ள சன்னி ஜோசப்பிற்கு பதிலாக 8 முறை எம்.பி.யாக இருந்த கொடிக்குன்னில் சுரேஷ் உள்ளிட்டோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. கர்நாடகாவில் நாளை (ஜூன் 3) டி.கே.சிவக்குமார் முதல்வராக பதவியேற்கிறார்.

அதற்கான ஏற்பாடுகள் ஒருபக்கம் நடந்து வருகிறது. அதேநேரம் கர்நாடகாவின் அடுத்த மாநில தலைவராக சதீஷ் ஜார்கிஹோளி அல்லது அரியானா பொறுப்பாளர் பி.கே.ஹரிபிரசாத் நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. பஞ்சாபில் 2027ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அமரிந்தர் சிங் ராஜா வாரிங்கிற்கு பதிலாக முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை நியமிக்க ஆதரவு பெருகியுள்ளது. மாநில பொறுப்பாளர்கள் பலரின் செயல்பாடுகளில் மேலிடம் அதிருப்தியில் இருக்கும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிலும் வியூகம் சார்ந்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளன என்று மூத்த தலைவர்கள் கூறினர்.

தமிழகத்தில் மாநில தலைவரை மாற்றும் பட்சத்தில் பெரிய அளவில் கட்சிக்குள் மோதல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. கட்சியில் அவருக்கு ஆதரவாக உள்ள சில மாவட்டத் தலைவர்கள் மாநில நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து தனிக்கட்சி தொடங்கும் திட்டத்தை கையில் எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் தமிழகத்தில் உடையும் நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

Tags : New Delhi ,Congress ,Tamil Nadu ,Congress party ,2029 general election ,
× RELATED தவெக பக்கம் சாய முடிவு: மதிமுக...