வனத்துறை பாதுகாப்பு எங்கே? ஆர்வலர்கள் கடும் ஆவேசம்
வால்பாறை : வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் ரேடியோ காலர் பொருத்தப்பட்ட வரையாடுகள் பல நாட்களாக நடமாடும் நிலையில் தமிழக அரசு திட்டத்தை கைவிட்டதா? வனத்துறை பாதுகாப்பு எங்கே என வன விலங்கு ஆர்வலர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடுகளை பாதுகாக்கவும், அவற்றின் நடமாட்டம் மற்றும் வாழ்விட பயன்பாட்டை கண்காணிக்கவும் தமிழக அரசு சிறப்பு திட்டத்தின் கீழ் சில வரையாடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்தி கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டது.
ஆனால், ரேடியோ காலர் பொருத்தப்பட்ட வரையாடு, கடந்த சில நாட்களாக வால்பாறைபொள்ளாச்சி மலைச்சாலையில் தொடர்ந்து நடமாடி வருவது வன உயிரின ஆர்வலர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் மட்டுமே வாழும் வரையாடுகள் அழிவின் விளிம்பில் உள்ள அரிய வன விலங்குகளாக கருதப்படுகின்றன. அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் திமுக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும், அறிவியல் அடிப்படையிலான கண்காணிப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வந்தது.
அதன் ஒரு பகுதியாக ரேடியோ காலர் பொருத்தப்பட்ட வரையாடுகளின் இருப்பிடம், இடம்பெயர்வு மற்றும் வாழ்வியல் பழக்க வழக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரேடியோ காலர் அணிந்த வரையாடு ஒன்று, வால்பாறைபொள்ளாச்சி சாலையில் பல நாட்களாக சுற்றித்திரிவதை வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து கண்டு வருகின்றனர்.
இதுகுறித்து வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளதால் அந்த வரையாட்டின் இருப்பிடம் வனத்துறைக்கு துல்லியமாக தெரிந்திருக்க வேண்டும். அப்படியிருக்கும்போது அதிக வாகன போக்குவரத்து உள்ள சாலையோர பகுதியில் அது பல நாட்களாக சுற்றித் திரிவதை ஏன் தடுக்கவில்லை? வனத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறதா? கண்காணித்தால் பாதுகாப்பு நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினர்.
மேலும், ரேடியோ காலர் பொருத்தும் திட்டம் வெறும் ஆய்வுக்காக மட்டுமா? அல்லது விலங்குகளின் பாதுகாப்புக்காகவா? திட்டம் நடைமுறையில் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக களத்தில் செயல்பட்டிருக்க வேண்டும் என்றும், தற்போது நிலவும் சூழலை பார்க்கும்போது தமிழக அரசு மற்றும் வனத்துறை இந்தத் திட்டத்தை கைவிட்டுவிட்டதா? என்ற சந்தேகம் எழுகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வால்பாறை பொள்ளாச்சி மலைச்சாலையில் அடிக்கடி வன விலங்குகள் சாலையை கடக்கும் நிலையில், அரிய வரையாடுகள் வாகன விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதாகவும், குறிப்பாக கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட விலங்குகளுக்கே போதிய பாதுகாப்பு இல்லையெனில் மற்ற வரையாடுகளின் நிலை என்ன எனவும் வன விலங்கு ஆர்வலர்கள் கடும் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே ரேடியோ காலர் பொருத்தப்பட்ட வரையாடுகளின் தற்போதைய நிலை, அவற்றின் கண்காணிப்பு நடைமுறை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வனத்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கண்காணிப்பு மட்டுமே இருக்கிறது. பாதுகாப்பு எங்கே எனவும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளனர்.
