×

நாங்குநேரி அருகே பயங்கரம்; தகாத உறவை கைவிட மறுத்த மகள் வாயில் விஷம் ஊற்றி கொலை: தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடிய தாய், தந்தை கைது

களக்காடு: நாங்குநேரி அருகே உறவினருடன் ஏற்பட்ட தகாத உறவை கைவிட மறுத்த இளம்பெண்ணை வாயில் விஷம் ஊற்றி கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு, தற்கொலை நாடகமாடிய தாய், தந்தையை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே செண்பகராமநல்லூரைச் சேர்ந்தவர் சிவன் (60). இவரது மனைவி வைரம்மாள் (57). தம்பதிக்கு 5 மகள்கள். இதில் 5வது மகள் அமுதா (21) திருமணமாகாத நிலையில் தாயுடன் வீட்டு வேலைகளை கவனித்து வந்தார்.

இந்நிலையில் அவரது உறவினர் ஒருவர் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதில் அவருக்கும், அமுதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடையில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த உறவினருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் அமுதா, அதனை பொருட்படுத்தாமல், அவருடன் தகாத உறவை நீடித்து வந்துள்ளார். இந்த விவகாரம் பெற்றோர் சிவன், வைரம்மாள் ஆகியோருக்கு தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த அவர்கள் அமுதாவை கண்டித்து, தகாத உறவை கைவிடும்படி எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக பெற்றோருக்கும் அமுதாவிற்கும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. எனினும் பெற்றோர் எதிர்ப்பை மீறி அமுதா தனது தகாத உறவை தொடர்ந்து வந்துள்ளார். இது பெற்றோருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் அமுதா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் மூலைக்கரைப்பட்டி போலீசார் வந்து அமுதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அமுதாவின் கழுத்தில் காயங்கள் இருந்ததை கண்ட போலீசார் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தனர். அதனடிப்படையில் பெற்றோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சம்பவத்தன்று சிவனும், வைரம்மாளும், அமுதாவிடம் தகாத உறவை நிறுத்துமாறு மீண்டும் வலியுறுத்தினர். அதற்கு அமுதா மறுக்கவே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அமுதாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து அமுதா வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றியுள்ளனர். மேலும் அவரது கழுத்தை நெரித்துள்ளனர்.

இதில் அமுதா சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் இருவரும் சடலத்தை தூக்கில் தொங்க விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது விசாரணையில் அம்பலமானது. இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, சிவன், வைரம்மாளை கைது செய்தனர். தகாத உறவை கைவிட மறுத்த இளம்பெண்ணை பெற்றோரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Nanguneri ,Kalakkadu ,Senbagaramanallur ,Nellai ,
× RELATED பைனான்சியர் கத்தியால் குத்தி எரித்து...