×

வலை விரிக்கும் போலி இணையதளங்கள்; இந்தியர்களை குறி வைத்தே அதிகளவு ஆன்லைன் மோசடி: கணிப்பொறி நிபுணர்கள் எச்சரிக்கை

இயந்திரமயமான இன்றைய வாழ்க்கை சூழலில், ஆண்ட்ராய்டு செல்போன்கள் உள்ளங்கைக்குள் உலகத்தை கொண்டு வந்துள்ளது. கொடுக்கல், வாங்கல் எல்லாமும் ஆன்லைன் மயமாகிவிட்டது. நவீன யுகத்தின் அபரிதமான இந்த வளர்ச்சி, மனிதர்கள் வாழ்வில் அனைத்து நிகழ்வுகளையும் எளிதாக்கி வருகிறது. அதே நேரத்தில், இதுபோன்ற அரிய தொழில்நுட்பங்கள் பல்வேறு மோசடிகளுக்கும் வழிவகுத்து வருவது அபத்தமானது.

ஆன்லைன் மூலம் நடக்கும் பண மோசடிகள் குறித்து (எம்சிஏஎப்இஇ) என்ற நிறுவனம் ‘‘ஷேப்பர் ஹாலிடேஸ்” என்ற தலைப்பில் சர்வே ஒன்றை நடத்தியது. இந்தியா உள்பட ஏழு நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்து அதனை அறிக்கையாக வௌியிட்டுள்ளது. அதில் குறிப்பாக இந்தியர்களை குறிவைத்து அதிகளவு ஆன்லைன் பணமோசடிகள் நடப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை வாலிப வயதை கடந்த 27 சதவீதம் பேர், போலியான இணையதளம் மூலம் பணத்தை இழந்ததை ஒப்புக்கொண்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில், 23 சதவீதம் பயணிகள் தங்களின் தனிப்பட்ட பாஸ்போர்ட் விவரங்களையும், போலியான இணையதளத்தில் பகிர்ந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. இலவச பொது வைபை சேவை என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். குறிப்பாக விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஓட்டல்களில் உள்ள பொது வைபையை பயன்படுத்தும் போது, ஹேக்கர்கள் மிக எளிதாக பயணிகளின் போன் அல்லது லேப்டாப் மூலமாக தனிப்பட்ட தகவல்களை திருடி, பண மோசடி செய்கின்றனர். இந்த அறிக்கையில் 38 சதவீதம் பேர் பொது இடங்களில் உள்ள வைபையை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையான இணையதளம் போல செயல்பட்டு, பயணிகளை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. அதே போல், இணையத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் முதலீடு செய்தால், அது இரட்டிப்பாகும் என்பதை நம்பியும், அதிகளவில் பொதுமக்கள் பணத்தை இழக்கின்றனர். மேலும் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை எடுத்துக்கொண்டு, சம்பந்தப்பட்டவரை மிரட்டி பணம் பறிக்கும் நிகழ்வுகளும் நடக்கிறது. போலியான இணையதளம் என்பது தெரியாமல் முன்பதிவு செய்யும் போது, தங்களின் தனிப்பட்ட அடையாளத்தை திருடியுள்ளதாக 36 சதவீதம் ேபர் ெதரிவித்துள்ளனர். இதுபோன்ற மோசடிகளில் பணத்தை இழப்பதை தவிர்க்க மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று கணிப்பொறி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கணிப்பொறி நிபுணர்கள் கூறியதாவது:
ஒருவர் தனது தனிப்பட்ட தகவல்களை, போலி இணையதளத்தில் உள்ளீடு செய்வதன் மூலமோ, எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சலில் வரும் போலி லிங்க்குகளை சொடுக்கி உள்ளே செல்வதாலோ தகவல்கள் திருடப்படுகிறது. மேலும் ஓட்டல்களில் தங்கும் போது, நெட்பிளிக்ஸ் போன்ற செயலிகளை பயன்படுத்துகின்றனர். அதை லாக் அவுட் செய்யாமல், ஓட்டலை விட்டு வௌியேறும் போதும் அவர்களது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றன. எனவே, ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போதும், பயண முன்பதிவு செய்யும் போதும், தங்களின் இணைப்புகளை மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் பயன்படுத்த வேண்டும்.

தெரியாத நபர்களிடமிருந்தோ அல்லது சந்தேகப்படும்படி இருக்கும் லிங்க்குகள் உள்ளிட்டவற்றை தவிர்க்கவேண்டும். அதே போல், தங்களுக்கு தெரிந்த நிறுவனம் மூலம் பயணத்தை உறுதி செய்வது பாதுகாப்பானதாகும். வௌியிடங்களில் செல்லும் போது, பொது வைபை வசதியை பயன்படுத்துவோர், மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். நாம் பயன்படுத்தும் இணையதளம் நம்பகமானதா என்பதை உறுதி செய்வது முக்கியமாகும். மேலும் தங்களது செல்ேபான், கம்ப்யூட்டர்களுக்கு நல்ல ஆன்ட்டி வைரஸ், பாதுகாப்புகள் அமைப்பதும் அவசியமாகும். மிக முக்கியமாக ஆன்லைன் பண மோசடியிலும், தங்களின் தனிப்பட்ட தகவல் திருட்டிலும் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் ெதரிவிக்க வேண்டும். இவ்வாறு கணிப்பொறி நிபுணர்கள் கூறினர்.

70% பேருக்கு எந்த தீர்வும் கிடைக்கல
‘‘ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 24 சதவீதம் பேர், இழந்த பணத்தை திரும்ப பெற்றுள்ளனர். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட 70 சதவீதம் பேருக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 சதவீதம் பேர் தங்களுக்கு நடந்த ஆன்ைலன் மோசடியை குறிப்பிட்ட நிறுவனத்திடமோ, தளத்திலோ புகார் செய்து திரும்ப பெற்றுள்ளனர். 6 சதவீதம் பேர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து பணத்தை திரும்ப பெற்றுள்ளனர். 41 சதவீதம் பேரின் ஆன்லைன் மோசடி புகார்களுக்கு, எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 17 சதவீதம் பேருக்கு புகார் செய்ய யாரை அணுக வேண்டும் என்று தெரியவில்லை. 12 சதவீதம் பேர், ஆன்லைன் மோசடி குறித்து புகார் செய்யக்கூட தயாராக இல்லை. தற்போது பெரும்பான்மையான மோடிகள் கார்டு மூலமும், ஆன்ைலன் மூலமும் தான் நடக்கிறது,’’ என்றும் சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு 42% பாதிப்பு
இந்தியாவில் நடந்து வரும் ஆன்ைலன் மோசடிகள் குறித்து நொய்டாவை சேர்ந்த ‘லோக்கல் சர்க்கிள்’ என்னும் ஆய்வு நிறுவனம், சமீபத்தில் சர்வே ஒன்றை நடத்தியுள்ளது. இதில் ‘கடந்த 3 ஆண்டுகளில் அவரோ அல்லது குடும்பத்தினரோ ஆன்லைன் மோடியால் ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டதாக 39 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். இதில் கடந்த ஆண்டில் (2025) மட்டும் 42 சதவீதம் பேர், ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 சதவீதம் பேர் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மோசடியில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 10 சதவீதம் பேர், ஏடிஎம் கார்டு மோசடியிலும், 10 சதவீதம் பேர் வங்கி கணக்கு மோசடியிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 சதவீதம் பேர், ஆன்லைனில் ஏதாவது வாங்கும் போதோ, விற்கும் போதோ, சில வலைதள பயனாளர்களால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்,’’ என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் ரூ.1,674 கோடி
‘‘தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்தாண்டு (2024) சைபர் க்ரைம் உதவி எண் 1930க்கும் 2,68,875 அழைப்புகள் பெறப்பட்டுள்ளது. மேலும், நிதி மோசடிகள் தொடர்பாக 34,392 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய இணையவழி குற்றத்தடுப்பு அறிக்கையில் 1,27,065 புகார்களும், அவற்றில் 4,326 புகார்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 80,206 புகார்கள் மீது சிஎஸ்ஆர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2024ம் ஆண்டு இணையவழி மோசடிகளில் ரூ.1,674 கோடி பொதுமக்கள் இழந்துள்ளனர். அதில் 772 கோடி முடக்கப்பட்டு, சுமார் ரூ.83.34 கோடி பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டது. மோசடி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளிடம் இருந்து 20,453 சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன,’’ என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பைனான்சியர் கத்தியால் குத்தி எரித்து...