சென்னை: தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த ஹர்ஷ்வர்தனின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சஷ்டிகன்(19)என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்;
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இன்று (31.05.2026) காலை 10.30 மணியளவில் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் தேர்த்திருவிழாவின்போது தேரின் சக்கரத்திற்கும் அருகிலிருந்த சுவற்றிற்கும் இடையே எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்ட ஹர்ஷவர்தன் (வயது 18), த/பெ.கோவிந்தராஜா, என்பவர் பலத்த காயம் ஏற்பட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர் உயிரிழந்து விட்டார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சஷ்டிகன் (வயது 19). த/பெ.கௌரிசங்கர் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
