×

சூறாவளி காற்றுடன் மழை போச்சம்பள்ளி வட்டாரத்தில் 50 டன் மாங்காய் உதிர்ந்தது

 

போச்சம்பள்ளி, மே 28: போச்சம்பள்ளி சுற்றுவட்டாரத்தில், சூறாவளி காற்றுக்கு சுமார் 50 டன் மாங்காய்கள் உதிர்ந்ததால், மா விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஊத்தங்கரை, சாமல்பட்டி, குன்னத்தூர், போச்சம்பள்ளி, கல்லாவி, ஆனந்தூர், புலியூர், சந்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட மா ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இதில் மல்கோவா, அல்போன்ஸா, செந்தூரா, பீத்தர் ஆகிய மா ரகங்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் ஊறுகாய், ஜூஸ் தயாரிப்பு உள்ளிட்ட மதிப்புகூட்டு பொருட்களாகவும் விற்பனை செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சியில் மா சாகுபடி முக்கிய பங்கு வகிக்கிறது. மா மகசூல், விற்பனை, ஏற்றுமதி என ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பருவநிலை மாற்றங்களால் மா விவசாயிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், பருவமழை குறைந்ததால் இரவை பாசன சாகுபடி மூலம், மாமரங்களில் பூக்கள் பூத்த நிலையில் மானாவாரி தோட்டங்களில் உள்ள மா மரங்களுக்கு தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது.

வறட்சியில் மரங்களை காப்பாற்ற விவசாயிகள் டிராக்டர் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி மா மரங்களை காப்பாற்றி வந்தனர். இதனால் வழக்கத்தை விட பராமரிப்பு செலவு அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் சூறாவளி காற்று வீசியது. இதில் சந்தம்பட்டி, கே.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மாங்காய்கள் அனைத்தும் உதிர்ந்தது. இதனால் தோப்பு முழுவதும் மாங்காய் குவியலாக காணப்படுகிறது.

சந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாதப்பன் என்பவரது தோட்டத்தில் 10 ஏக்கர் மாங்காய், சின்னசாமி என்பவரது தோட்டத்தில் 12 ஏக்கர் மாங்காய், ஆலோரஅள்ளி கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரது 6 ஏக்கர் தோட்டத்திலும் மாங்காய் உதிர்ந்து சேதமடைந்தது. இதேபோல் பலரது தோட்டங்களிலும் சுமார் 50 டன் மாங்காய்கள் உதிர்ந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மா விவசாயிகள் நேற்று மாவட்ட கலெக்டரை சந்தித்து நிவாரணம் கேட்டு மனு அளித்தனர். இதுகுறித்து சந்தம்பட்டியை சேர்ந்த விவசாயி சக்திவேல் கூறுகையில், `மாங்காய்க்கு போதிய விலை கிடைக்காததால், மாங்காய்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டு வைத்தோம்.

இதனால், பல நாட்களாக மாங்காய்கள் மரத்திலே அழுகி வந்தது. நேற்று சூறாவளி காற்றுக்கு சந்தம்பட்டி, ஆலோரஅள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட டன் மாங்காய் உதிர்ந்து விட்டது. இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்துள்ளோம். இது குறித்து கலெக்டரை சந்தித்து இழப்பீடு கேட்டு மனு அளித்துள்ளோம். அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்,’ என்றார். இதுகுறித்து மா விவசாயி சிவகுரு கூறியதாவது: மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 8 லட்சம் டன் மாங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. பெங்களூரா, நீலம், மல்கோவா என 20க்கும் அதிகமான மா ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

விளைச்சலில் 3 லட்சம் டன் மாங்காய் விற்பனைக்கும், 5 லட்சம் டன் மாங்கூழ் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.3,500 கோடி அன்னிய செலாவணி கிடைக்கிறது. இந்நிலையில் இந்தாண்டு மாங்காய் விளைச்சல் 60 சதவீதம் வரை குறைந்த நிலையில் மாங்கூழ் ஆலை நிர்வாகங்கள் நல்ல விலை கொடுக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் கிலோ ரூ.5க்கும் குறைவாக ஆலை நிர்வாகங்கள் விலை நிர்ணயம் செய்ததால் வேதனை அடைந்துள்ளோம்.

இந்நிலையில் மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாந்தோட்டங்களில் மாங்காய்கள் கீழே விழுந்து வீணாகி வருகிறது. இதனால் வருடந்தோறும் எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனால் எந்த நிர்வாகமும் மா விவசாயிகளை கண்டு கொள்ளாமல் உள்ளது வேதனையாக உள்ளது. எனவே வியாபாரிகள் வெளி மாநில கொள்முதலை தவிர்த்து உள்ளூர் கொள்முதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அரசு பெருத்த நஷ்டமடைந்து வரும் மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags : Cyclone ,Pochampally ,Krishnagiri district ,Uthankarai ,Chamalpatti ,
× RELATED பூட்டியே கிடக்கும் விஏஓ அலுவலகம்